கல்வியாளர் நெ. து. சுந்தரவடிவேலு

by Editor / 11-10-2021 04:53:02pm
கல்வியாளர் நெ. து. சுந்தரவடிவேலு

பத்மஸ்ரீ முனைவர் நெ. து. சுந்தரவடிவேலு (நெய்யாடுபாக்கம் துரைசாமி சுந்தரவடிவேலு,அக்டோபர் 12, 1912 - ஏப்ரல் 12, 1993) தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின்,துணைவேந்தராக இரு முறை (1969 முதல் 1972 வரையும் 1973 முதல் 1975 வரையும்) பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்பு தமிழ் நாடு அரசின் கல்வி ஆலோசகராகவும், பொதுக்கல்வி இயக்குநராகவும்  பல காலம் சிறப்பாகப் பணியாற்றினார்.இவரது பெற்றோர் துரைசாமி, சாரதாம்பாள் தம்பதியினர்.


1954 ஆம் ஆண்டு, சுந்தரவடிவேலு பொதுக்கல்வி இயக்குநராகப் பதவி ஏற்றார். அப்போது தமிழக முதல்வராக இருந்த காமராசருடன் இணைந்து பல திட்டங்களைச் செயல்படுத்தினார். இவற்றுள் முன்னுரிமை வகிப்பது இலவசக்கல்வி மற்றும் இலவசச் சீருடைத்திட்டங்கள் ஆகியவை ஆகும்.இவர் காலத்தில் இலவச மதிய உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பள்ளிக் குழந்தைகள் புத்தக மூட்டைகளோடு மதிய உணவுக் கட்டுச்சோற்று மூட்டைகளையும் சுமந்து சென்று கொண்டு இருந்த நிலைமை மாறியது. இலவச மதிய உணவுத் திட்டம் மூலம் மாணவர்கள் சாப்பிட்டது மட்டுமில்லாமல், இலவசக் கல்வியும் கற்றனர்.


எல்லா ஊர்களிலும் தொடக்கப் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. பின்தங்கிய பல குடும்பங்களிலிருந்து மாணவர்கள் கல்வி கற்றார்கள். தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி பெருகியது. ஆயிரக்கணக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்தப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை எப்படிப் பணியமர்த்துவது என்ற கேள்வி எழுந்தது. இதற்கு அந்நாள் முதலமைச்சரும் பொதுக்கல்வி இயக்குனரும் எடுத்த முடிவு, தமிழ்நாட்டிலே படித்துவிட்டு வேலை கிடைக்காமல் துயருற்ற பலருக்கும் வேலை கிடைக்கச் செய்தது எனலாம். ஆயிரக்கணக்கானோர் ஓராசிரியர் பள்ளிகளுக்கு ஆசிரியர்களாகப் பணியமர்த்தப்பட்டனர்.சுந்தரவடிவேலு, 1954 ஆம் ஆண்டு பொதுக்கல்வி இயக்குநராகப் பதவியேற்றபோது பொது நூலக இயக்குநராகவும் பொறுப்பு ஏற்றார். நூலகத்தின் தேவையை உணர்ந்த இவர் தமிழ்நாடு முழுவதும் 400-க்கும் மேலான கிளை நூலகங்களை ஏற்படுத்தினார்.


சுந்தரவடிவேலு பள்ளிக் கல்வியில் திறம்படப் பணிபுரிந்ததைப் போலவே சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் செயல்பட்டார். பள்ளிப்படிப்புடன் நிறுத்திவிட்டுக் கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாமல் வேலைக்குச் செல்வோர் உயர்கல்வி பெறுவதற்காகக் கல்லூரிகளில் மாலை நேரக் கல்லூரிகளை அறிமுகப்படுத்தினார். கல்லூரி ஆசிரியர்களுக்கு மறுபயிற்சி எனப்படும் படிப்பைக் கொண்டு வந்தார்.


சுந்தரவடிவேலு பெரியவர்களுக்காக 30 நூல்களை எழுதியுள்ளார். சிறுவர்களுக்காக 13 நூல்களை வள்ளுவர் வரிசை என்னும் தலைப்பில் எழுதி உள்ளார். பெரியார் பற்றிய அரிய நூலொன்றையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவருடைய வாழ்க்கை வரலாற்றை மூன்று தொகுதிகளாக எழுதி வெளியிட்டுள்ளார்

 

Tags :

Share via