சின்ன சின்ன செய்திகளின் தொகுப்பு

by Editor / 19-11-2021 03:45:16pm
சின்ன சின்ன செய்திகளின் தொகுப்பு

வீட்டின் சுவர் இடிந்து 8 பேர் பலி


வேலூர்: பேரணாம்பட்டில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 குழந்தைகள், பெண்கள் என 8 பேர் உயிரிழந்தனர். மசூதி தெருவில் வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிய 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


செஞ்சியில் காவலர் குடியிருப்புக்குள் மழைநீர் புகுந்தது


செஞ்சி நகரில் பலத்த மழையால் சாலைகளில் ஆறுபோல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. செஞ்சியில் காவலர் குடியிருப்பு வளாகத்துக்குள் மழைநீர் புகுந்தது. உளுந்தூர்பேட்டை அருகே பாண்டூரில் சாலையில் மலை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 55,000 கனஅடியாக அதிகரிப்பு


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 45,000 கனஅடியில் இருந்து 55,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் 55,000 கனஅடி காவிரி நீரும் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.10 அடியாக நீடிக்கும் நிலையில் அணையின் நீர் இருப்பு 93.63 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கான நீர்திறப்பு 500 கனஅடியாக இருக்கிறது.

மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு


வருசநாடு, மூலவைகையில் பெய்த கனமழையால் மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைகை ஆற்றில் 11,000 கனஅடி தண்ணீர் வருவதால் அணுகு சாலை, யானைக்கல் தரைப்பாலம் நீரில் மூழ்கியது


தென்பெண்ணையாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


சாத்தனூர் அணையில் இருந்து 40,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணையாற்றின் கரையோர மக்கள் ஆற்றில் குளிக்கவோ, கடக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கால் ஆம்பூர், விழுப்புரம், திருத்தணி பகுதிகளில் தரைப்பாலங்கள் மூழ்கின


ஆம்பூர் அருகே மாதனூர் - உள்ளி இடையே உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் முற்றிலுமாக மூழ்கியது. விழுப்புரம் சாலாமேடு, திருப்பாச்சனூருக்கு செல்லும் தரைப்பாலம் மழைநீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருத்தணி நாராயணபுரம் அருகே கொற்றலை ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது. பிச்சாட்டூர் அணையிலிருந்து ஆரணியாற்றில் 6,000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டதால் காளஹஸ்தி சாலை மூடப்பட்டது.


பொன்னை ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம்


வேலூர் காட்பாடி அருகே உள்ள பொன்னை ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொன்னை ஆற்றில் 55,816 கனஅடி தண்ணீர் வருவதால் வேலூர், ராணிப்பேட்டைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு 500 கனஅடியாக குறைப்பு


செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு 3,000 கனஅடியிலிருந்து 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து 2,700 கனஅடியாக உள்ளது. மழை குறைந்ததால் புழல் ஏரியிலும் உபரி நீர் திறப்பு 2,500 கனஅடியில் இருந்து 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.


காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை - புதுச்சேரி இடையே முழுமையாக கரையை கடந்தது


வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் முழுமையாக கரையை கடந்தது. புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. அதிகாலை 1.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கி 3 மணிக்கும் 4 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கரையை கடந்தது.

 

Tags :

Share via