திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் பின்புறம் 2,668 அடி உயரம் உள்ள மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

by Editor / 19-11-2021 07:16:21pm
திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் பின்புறம் 2,668 அடி உயரம் உள்ள மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

 


திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு கோயிலுக்கு பின்புறமுள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தான் என்ற அகந்தையை அழிக்க சிவ பெருமான் திருவண்ணாமலையில் அடிமுடி காணமுடியாத அக்னி பிழம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். அந்த நாளே திருவண்ணாமலையில் கார்த்திகை தீபதிருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு தீபத்திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் இரவில் உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் பவனி வந்து அருள்பாலித்தனர். ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக தீபத்திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. அதேபோல், மாட வீதியில் நடை பெறும் சுவாமி வீதி உலா, வெள்ளித்தேரோட்டம், பஞ்ச ரதங்கள் பவனி ஆகியவையும் ரத்து செய்யப்பட்டன.

அதற்கு மாற்றாக அண்ணாமலையார் கோயில் 5ம் பிரகாரத்தில் சுவாமி உலா நடந்தது. அதிலும், பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கவில்லை. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பின்னர் கடந்த 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தீபத்திருவிழாவின் 10ம் நாளான இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பஞ்சாமிர்தம் , பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட சிறப்பு ெபாருட்களால் அபிஷேகம் நடந்தது. இதைதொடர்ந்து அண்ணாமலையாருக்கு வைரக்கிரீடம் மற்றும் தங்ககவசமும், உண்ணாமுலையம்மனுக்கு தங்க கவசமும் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதையடுத்து அண்ணாமலையார் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது .

பின்னர் பரணி தீபமானது ஓடல், எக்காளம் இசை முழங்க அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு தீபம் ஏற்றப்பட்டது. கோயில் தங்க கொடிமரம் அருகேயுள்ள அகண்டத்தில் தீபம் ஏற்றப்பட்டது.மேலும் வைகுந்த வாயில் வழியாக பரணி தீபம் காட்சியளித்தது. தீபவிழாவின் உச்சக்கட்ட நிகழ்வாக இன்று மாலை 6 மணியளவில்  கோயிலின் பின்புறம் உள்ள 2,668அடி உயரமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பபட்டது.  

 

Tags :

Share via