போரூர் பள்ளிக்கூடத்தில் மு.க.ஸ்டாலின் 3-ந்தேதி தொடங்கி வைக்கிறார் சிறுவர்களுக்கு தடுப்பூசி:

by Admin / 27-12-2021 12:44:15pm
போரூர் பள்ளிக்கூடத்தில் மு.க.ஸ்டாலின் 3-ந்தேதி தொடங்கி வைக்கிறார் சிறுவர்களுக்கு தடுப்பூசி:

ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் நாடுமுழுவதும் வருகிற 3-ந்தேதி முதல் 15 வயதில் இருந்து 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.

அதேபோல் 10-ந்தேதி முதல் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. தமிழகத்தில் சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணிக்கான முன் ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது.

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது
ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்படி 3-ந்தேதியே சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. போரூரில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

அன்றைய தினமே மாநிலம் முழுவதும் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். மொத்தம் 33 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறார்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு விரைவாகவே தடுப்பூசி போட்டு முடிக்க திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக அனைத்து பள்ளிகளிலும் மாணவ- மாணவிகளுக்கு தடுப்பூசி போடப்படும். பள்ளிகளை பொறுத்தவரையில் அவர்கள் படிக்கும் வகுப்பை வைத்தே வயது முடிவு செய்யப்பட்டுவிடும். அதில் பிரச்சினை இல்லை. மற்ற படி தடுப்பூசி போடுவதற்கு ஆதார் அடையாள அட்டை கேட்கப்படும்.

பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு செலுத்தியதும், பொது இடங்களிலும் சிறார்களுக்கான தடுப்பூசி முகாம் நடத்தப்படும். தடுப்பூசியை பொறுத்தவரை தட்டுப்பாடு எதுவும் இல்லை. சிறார்களுக்கு கோவேக்சின் போடப்படும். தற்போது 22 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. கூடுதலாக 25 லட்சம் கேட்டுள்ளோம். விரைவில் அதுவும் வரும்.

10-ந்தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி போடுவதும் தொடங்கும். மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களுக்கு முதலில் போடப்படும்.

அதைத்தொடர்ந்து மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி போடப்படும். ஏற்கனவே 2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களாக இருப்பதால் இணை நோய்கள் பிரச்சினை இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் தேவைப்பட்டால் பூஸ்டர் டோஸ் போடுவதற்கு முன்பு அவர்களுக்கு பரிசோதனையும் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via