பிற இந்திய மொழிகளையும் தமிழக பள்ளி மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் -ஆளுநர் .

by Writer / 25-01-2022 06:31:12pm
பிற இந்திய மொழிகளையும் தமிழக பள்ளி மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் -ஆளுநர் .

குடியரசு தினத்தையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 


"அன்புமிக்க எனது தமிழக சகோதர, சகோதரிகளே,வணக்கம். மங்களகரமான நமது 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் நிறைவான நல்வாழ்த்துகளையும் என் இதயம் கனிந்த நல்லாசிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவையும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-ஆவது பிறந்த நாள் விழாவையும் உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் தேசியப் பெருமிதத்தோடும் கொண்டாடி வருகிறோம். இந்த நன்னாளில், தேச விடுதலை வீரர்களை, அவர்களின் தியாகங்களுக்காகவும் இன்னல்களுக்காகவும் நினைவுகூர்கிறோம். வீரமங்கை வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பிரம் பிள்ளை, மகாகவி சுப்பிரமணிய பாரதியார், முத்துராமலிங்கத் தேவர், ஜானகி தேவர் உள்ளிட்ட பலரையும் எண்ணிப் பார்த்து, நம்முடைய நன்றி அறிதலை அவர்களுக்கு உரித்தாக்குகிறோம்.


தமிழகத்திலிருந்து பற்பல வீரர்களும் தியாகிகளும் தேச விடுதலை இயக்கத்தில் பங்கேற்றுள்ளனர். இவர்களில் பலர், காலனி ஆதிக்கத்தை ஒழிப்பதற்காக நேதாஜியின் தலைமையில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியுள்ளனர். இந்திய தேசிய ராணுவத்தில் பங்கேற்றவர்களும் அவர்களின் வழித்தோன்றல்களும் நம்முடைய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளனர். தம்முடைய வியர்வை, ரத்தம், தியாகம் ஆகியவற்றால் நமக்குச் சுதந்திர அமுதத்தை அளித்த வீரர்களையும் தியாகிகளையும் அடையாளம் கண்டு கௌரவிக்கவேண்டும். இத்தனை நாட்கள், அவர்களின் பங்களிப்பை மறந்து, அவர்களை கவனியாமல் இருந்ததற்காக மன்னிப்புக் கோரவேண்டும். அவர்களின் இன்னல்கள் குறித்த வரலாற்றை வருங்காலத்திற்குச் சேமிக்கவேண்டும். வாராது போல வந்த மாமணியாம் சுதந்திரத்தைப் போற்றி, அந்த மகத்தான தியாகிகளின் கனவு பாரதத்தை, பொருட்செல்வம் செறிந்த, ராணுவ பலம் மிக்க, ஞானத்தில் உயர்ந்த, உலக சகோதரத்துவ நோக்கோடு ஆன்மிகத்தில் திளைத்த பாரதத்தை உருவாக்கவேண்டும்.


நண்பர்களே, பல்வேறு வேற்றுமைகளே, பாரதத்தின் அழகும் வலிமையும் ஆகும். மானுடத்தின் ஒற்றுமையையும், பிரபஞ்சப் படைப்போடு ஒன்றுபட்ட அதன் ஒருங்கிணைப்பையும் ஆதாரமாகக் கொண்ட பண்பாட்டுப் பெருமிதத்தில் வேரூன்றி, நம்முடைய மக்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒற்றைப் பெருங்குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர். நம்முடைய மண்ணோடு கலந்துவிட்ட பண்பாட்டு விழுமியங்கள், கன்னியாகுமரி முதல் காஷ்மீரம் வரை, கட்ச் முதல் காமரூபம் வரை இருக்கும் பாரதீய குடிமக்களின் அன்றாட வாழ்வில் பிரதிபலிப்பதைக் காணலாம். எல்லாக் காலத்திற்குமான ஓங்குயர் ஞானியான திருவள்ளுவர், சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே, தெய்வீகம் கமழுகிற புனிதத் திருக்குறளை நமக்கு அளித்துள்ளார். திருக்குறளில் காணப்படுகிற இம்மைக்கும் மறுமைக்குமான ஞானமே, பாரதத்தின் அழிவற்ற ஆன்மிகத்தின் ஊற்றுக்கண் எனலாம்.


நாம் சுதந்திர நாடானவுடனேயே, காலனி ஆட்சியாளர்களால் நம்முடைய தனி மற்றும் கூட்டு மனங்களில் விதைக்கப்பட்ட நச்சு விதைகள் குறித்தும், அவற்றின் நீண்டகால விளைவுகள் குறித்தும் அண்ணல் காந்தியடிகள் எச்சரித்தார். நச்சுத்தன்மை பற்றிய உணர்வோடு இருக்கும்படி நினைவூட்டினார். நம்மையும் நம் சமுதாயத்தையும் நச்சுநீக்கம் செய்துகொள்ளும் வகையில் பணியாற்றச் சொன்னார். நச்சுநீக்கப் பணி நீண்டகாலம் பிடிக்கும் என்பதையும், ஆனால், நவபாரதத்தை உருவாக்குவதற்கான சமூக ஒற்றுமைக்கும் தேசியப் பெருமிதத்திற்கும் இது அவசியம் என்பதையும் எடுத்துரைத்தார். ஏதோவொரு காரணத்தைக் கூறி, நம்முடைய சமூக ஒற்றுமையை உருக்குலைக்க முயலும் எதிர்மறை சக்திகள் குறித்து நாம் எப்போதும் கண்காணிப்பாக இருப்பது அவசியம்.


கொரோனா சூழலில் சற்றே மாற்றம் கண்டபின், கவர்னர் மாளிகையில் நடைபெறவிருக்கும் விழாவில், வெற்றியாளர்கள் பாராட்டப்பெறுவர். இந்த மங்கலத் தருணத்தில், அனைவருக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.வாழ்க தமிழ், ஜெய் ஹிந்த்" என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via