உறவுகளின் உணர்வுகளை உணர்வோம் முதுமையைப் போற்றுவோம்

by Editor / 14-02-2022 10:24:36am
உறவுகளின் உணர்வுகளை உணர்வோம்  முதுமையைப் போற்றுவோம்

நம் வீட்டின் தாத்தாக்கள், பாட்டிகள் வயதால், அனுபவத்தால் பழுத்த பழங்கள்.ஆனால்,
உடலாலும் உள்ளத்தாலும் அவர்களின் உணர்வுகளாலும் குழந்தைகளைப் போன்றவர்கள் அவர்கள்..

உண்மை தான், உடலின் தோல்கள் எல்லாம் சுருங்கிய நிலையில் தலையிலே பளிச்சிடும் நரையோடு கண்ணிலே கண்ணாடி, கையிலே கைத்தடி என உடலின் சிறு சிறு  அசைவுகளுக்கும் குழந்தையைப் போல் ஒரு துணை தேடுகின்ற பொக்கை வாய் பருவமாகும் ‘முதுமை’

எனவே நாம், நம் தாத்தாக்களை, பாட்டிகளை ஒரு குழந்தையைப் போல் பார்த்துப் பார்த்துப் பத்திரமாய் அரவணைத்துக் கொள்ள வேண்டியது நமது கடமை..

ஆனால், இன்றோ முதியோர்கள் ஒரு சுமையாகவும், தொல்லையாகவும், நெற்பதர்களைப் போல புறம்  தள்ளப்படுகிறார்கள்.

இயற்கையாகவே முதுமையின் வலியும், அதனால் ஏற்படும் பலவீனமும், தனிமையும் மிகுந்த வேதனைத் தரக்கூடிய ஒன்றாகும்.

இந்நிலையில் நாம் அவர்களை புறந்தள்ளுவது கொடிய ரணத்தை அவர்களுக்கு ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

இன்று நாம் முதியவர்களை மதித்து நடந்தால் நம் வயோதிகத்தில் நாம் மதிக்கப்படுவோம், அரவணைக்கப் படுவோம்.

இல்லையேல் நாமும் முதியோர் இல்லங்களில் அடைக்கப்படுவோம்.

முதியோர்களை ஆதரவுக் கரம் நீட்டி அன்பு செலுத்த வேண்டும்.

அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்காமல் தமது இல்லத்திலேயே வைத்து கண்ணின் இமை போன்று அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.

அவர்களின் உணவு, உடை, உறைவிடம், மருத்துவ வசதி போன்றவற்றிற்கு நாம் மனதார பொறுப்பேற்க வேண்டும்.

முதியோர்கள் யார் என்பதை நாம் நன்கு சிந்தித்து பார்ப்போமானால் அவர்கள் வேறு யாருமல்ல.நம் பெற்றோர்கள்

நம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கியவர்கள்; நமக்காக உழைத்து உருக்குலைந்தவர்கள்

நம்மை வாழ வைத்தவர்கள்; அனுபவசாலிகள் ; இளம் சமுதாயத்தின் எதிர்கால வழிகாட்டிகள்
 

 

Tags :

Share via