ஈகைத் திருநாளில் நாம் யாருக்கு, என்ன தர வேண்டும்?

by Editor / 24-07-2021 09:08:31am
ஈகைத் திருநாளில் நாம் யாருக்கு, என்ன தர வேண்டும்?

தானம், தருமம், கொடை, ஈகை என கொடுப்பதையும் வகைப்படுத்தி உள்ளனர் தமிழர்கள். பொதுநோக்கம், கோயில் பணி போன்ற செயல்களுக்குத் தருவது தானம். கேட்பவருக்குத் தேவையானதைக் கொடுப்பது தருமம். கல்வி கலைகளில் சிறந்தவர்களுக்குக் கொடுப்பது கொடை என்று சொல்லும் தமிழர் வறியவர்களுக்கு பதிலுதவி எதிர்பாராது செய்யும் கொடையை ஈகை என்கிறார்கள்! பெரும்பாலும் ஈகை என்பது ஒரு விருட்சம் போல. யாரோ பலன் கருதாது இட்ட விதை, வளர்ந்து ஒரு காலத்தில் விருட்சமாக ஊருக்கே பலனளிப்பதும் நிகழும். 

வாழ்க்கையொன்றும் அந்த சிறுமிக்கு அவ்வளவு சுலபமானதாக அமைந்திடவில்லை. அமெரிக்காவின் டெக்சாஸ் - நியூமெக்சிகோ எல்லைக்கிடையே அமைந்திருந்த அந்த சிறிய பண்ணை வீட்டில் இரு சகோதரர்களுடனும், வறுமையுடனும் வளர்ந்த அச்சிறுமிக்கு வாழ்க்கை கடினமானதாக இருந்தபோதிலும், அவளது லட்சியம், வறுமையை விடப் பெரியதாக இருந்தது. 1930-களில் மின்சாரம், குடிநீர் என வசதி எதுவுமில்லாத அந்த சிறிய வீட்டில் கனவுகள் மட்டும் நிறைந்திருந்தன.

எப்படியாவது தங்களது குழந்தைகள் ஏழ்மையை வென்றுவிட வேண்டும் என்ற பெற்றோரின் கனவு, தனது பேரக்குழந்தைகள் பேர் சொல்லும் பிள்ளைகளாக வளரவேண்டும் என்ற தாத்தாவின் கனவு, இரண்டும் இப்போது அந்த சிறுமிக்கும் தொற்றிக்கொள்ள, கனவை நனவாக்க அவள் அழுத்தமாகப் பற்றியது கல்வியை...

ஆனால், எப்போதும் ஏழைக்குப் படிப்பு எட்டாக்கனி தானே? தனது பிள்ளை படிப்பில் காட்டிய ஆர்வத்தை நிஜமாக்க, வறுமையின் பிடியிலிருந்த அந்தக் குடும்பம் இன்னும் அதிகம் உழைத்தது. பதினாறு வயதில், பெருமைவாய்ந்த ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயில்வதற்கு அவள் தேர்வானபோது, அதற்கான கட்டணத்தை செலுத்த, அச்சிறுமியின் பாட்டி தனது வீட்டை விற்கவும் நேரிட்டது. சட்டம் பயின்றபிறகும், பல்வேறு சவால்களை சமாளித்து, படிப்படியாக முன்னேறிய அவர், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு, தனது ஐம்பதாவது வயதில், ஜனாதிபதி ரீகனின் பரிந்துரையுடன் அமெரிக்க சுப்ரீம் கோர்டின் முதல் பெண் நீதிபதியாக பொறுப்பேற்றார். அவர்தான் சாண்ட்ரா டே ஓ-கான்னர்.

ஏழ்மையான பின்னணியிருந்து வந்ததாலோ என்னவோ, "எல்லாவித சூழலுக்கும், எல்லாவித பிரச்னைகளுக்கும் ஏற்ற ஒரே நபர்" என்று பேர்சொல்லும் பிள்ளையாக கடைசிவரை எளியவர்களுக்கு துணை நின்றார் சாண்ட்ரா!

அமெரிக்காவில் அப்படியென்றால், இந்தியாவில் இன்னொரு விதம். கேரளா உழவூரில், ஒடுக்கப்பட்ட இனத்தில், ஏழு குழந்தைகளில் நான்காவதாக 1920களில் பிறந்த அந்த சிறுவனுக்கும் வாழ்க்கை அதைவிடக் கடினமானதாக இருந்தது. "கல்வி மட்டுமே உன்னை உயர்த்தும்" என்ற தந்தையின் வார்த்தையைப் பற்றிக்கொண்ட சிறுவன் தினமும் 15 கிலோமீட்டர் நடந்து சென்றாலும், பாடங்களை கவனித்தது எல்லாம் வகுப்பறைக்கு வெளியில் நின்றுதான்.

மிகக் குறைந்த கல்விக் கட்டணத்தைக் கூட செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டிருந்தாலும், தனது விடாமுயற்சியால் திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் 1940-களில் பி.ஏ. மற்றும் எம்.ஏ. பட்டங்களை முதல்நிலையில் பெற்றுத் தேர்ந்த முதல் தலித் இளைஞர் என்ற பெருமையைப் பெற்றார் அவர்.

படிப்பு முடிந்து, தி ஹிந்து மற்றும் தி டைம்ஸ் நாளிதழ்களில் பணியாற்றிய அந்த இளைஞரை சரியான சமயத்தில் கண்டறிந்த ஜி.ஆர்.டி. டாட்டாவின் தொண்டு நிறுவனம், 16,000 ரூபாய் உதவித்தொகையுடன் 1944-ம் ஆண்டு அவரை லண்டன் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைத்தது. பொருளாதாரம் மற்றும் அரசியல் அமைப்பில் மேற்படிப்பு படித்து, பின்னாளில் பர்மா, தாய்லாந்து, துருக்கி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு தூதராக பணியாற்றியவர், தொடர்ந்து பல்வேறு உயர்பதவிகளை வகித்து, இறுதியில் இந்திய ஜனாதிபதி என்ற தேசத்தின் மிக உயர்ந்த பதவியையும் வகித்தார்.

ஆம், "தன்னைச் சுற்றிலும் உள்ள அனைவரையும் நல்லவர்களாகப் பார்க்கும், நல்லவர்களாக மாற்றும் நல்ல மனிதர்" என்ற பெயரைப்பெற்று, இந்திய ஜனாதிபதிகளிலேயே இன்றும் நினைக்கப்படுபவராக, எளியவர்களின் பிரதிநிதியாக இருந்த, நமது நாட்டின் பத்தாவது ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன்தான் அவர்.

நிகழ்வுகள் இரண்டிலும், இருவரிடையேயும் காணப்பட்ட தாகம் ஒன்றுதான். ஆனால், அவர்களுக்கு தக்க சமயத்தில் உதவிய இருவரின் ஈகையும் பிரதிபலன் எதிர்பாராதது. சாண்ட்ராவின் பாட்டி மற்றும் ஜி.ஆர்.டி. டாட்டா ஆகிய இரு மாமனிதர்கள் போல் எத்தனையோ எண்ணற்றவர்களின் ஈகை அவர்களுக்கு பலனளிக்காமல் இந்த உலகுக்கு எத்தனையோ வகைகளில் பலனளித்திருக்கிறது. அதனால்தான், ரோஜாவைக் கொடுக்கும் கரங்கள் என்றும் மணக்கும் என்று கூறும் இஸ்லாம், ஈகையை தனது ஐந்து கடமைகளில் நான்காவதாக வைத்திருக்கிறது. ஆம்... இல்லாதவருக்கு கொடுத்து நமது கரத்திலும் ரோஜாவின் மணத்தை உணர்வோம்!

 

Tags :

Share via