நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் விரைவில் சீனா திரும்ப நடவடிக்கை

by Admin / 23-02-2022 12:58:18pm
 நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் விரைவில் சீனா திரும்ப நடவடிக்கை


சீனாவில் கொரோனா பரவியதை தொடர்ந்து அங்கு பயின்று வந்த 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் கடந்த 2020-ம் ஆண்டு தாயகம் திரும்பினர்.
 
இந்த மாணவர்கள் மீண்டும் தங்கள் கல்விக்கூடங்களுக்கு செல்வதற்கு சீனா இதுவரை விசா அனுமதிக்கவில்லை. இதனால் அவர்களின் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த விவகாரத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு மட்டங்களிலும் இந்தியா தனது கவலையை வெளியிட்டபோதும், தொடர்ந்து மவுனம் காத்து வந்த சீனா தற்போது முதல் முறையாக நேர்மறையான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதாவது இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்களின் கல்வி பாதித்து வருவது குறித்து தங்களுக்கு தெரியும் எனவும், இந்த மாணவர்கள் விரைவில் சீனா திரும்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக தங்கள் நாட்டு தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறும் தெரிவித்து உள்ளது.

இந்த தகவலை பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்திடம் சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்திய மாணவர்களிடம் எந்த வகையிலும் பாகுபாடு காட்டப்படமாட்டாது எனவும், ஏனெனில் அவர்களின் படிப்பை மீண்டும் தொடங்குவது அரசியல் பிரச்சினை அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் சீனாவில் பயின்று வரும் இந்திய மாணவர்கள் பிரச்சினையில் விரைவில் சுமுக முடிவு ஏற்படும் என்பது உறுதியாகி உள்ளது.

 

Tags :

Share via