சிம்பு வழக்கு - அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம்

by Editor / 09-03-2022 11:50:14pm
சிம்பு வழக்கு - அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம்

நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கடந்த 2016ஆம் ஆண்டு தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் வெளியான திரைப்படம் அன்பானவன் அடங்காதவன் அசராதவன். இந்த படத்தில் நடிக்க சிம்புவுக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு , ஒரு கோடியே 51 லட்சம் முன்பணமாக வழங்கப்பட்டுள்ளது.  மீதம் 6 கோடியே 48 லட்சம் ரூபாய் தர வேண்டியிருந்தது. படத்தில் நடிகர் சிம்பு நடித்து முடித்து படமும் வெளியான நிலையில் , பாக்கித் தொகையை தராமல் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் இழுத்தடித்ததாக தெரிகிறது. இதுகுறித்து நடிகர் சங்கத்தில் புகார் தெரிவித்த  சிம்பு , மீதமுள்ள 6 கோடியே 48  லட்சத்தை பெற்றுத் தருமாறு மனு அளித்திருந்தார். ஆனால் இந்த படத்தில் தனக்கு ஏற்பட்ட இழப்பை சிம்புவிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும் என மைக்கேல் ராயப்பன் தரப்போ தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து நடிகர் சிம்பு சென்னை உயர்நீதிமன்றத்தில், தன்னை குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வருவதாக மைக்கேல் ராயப்பனுக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு  மனு தாக்கல் செய்தார். இதில் எதிர் மனுதாரர்களாக தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், நடிகர் விஷால் ஆகியோரையும் சேர்ந்திருந்தார்.  இதனை விசாரித்த நீதிபதி வேல்முருகன்  தயாரிப்பாளர் சங்கம் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். ஆனால் தயாரிப்பாளர் சங்கம் எழுத்துபூர்வமாக எந்த பதிலையும் தாக்கல் செய்யவில்லை.  இந்நிலையில்  இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன் ஆயிரத்து 80 நாட்கள் ஆகியும் இந்த வழக்கில் எழுத்துப்பூர்வமான எந்த வாதத்தையும் தாக்கல் செய்யவில்லை என்று கூறி திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து  உத்தரவிட்டார்.  அத்துடன் இந்த தொகையை  பதிவாளர் அலுவலகத்தில்  வருகிற 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை வருகிற 1ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

 

Tags :

Share via