ரெயிலில் இறந்தவர் உடலுடன் 4 மணி நேரம் பயணம்

by Admin / 12-03-2022 10:22:29am
ரெயிலில் இறந்தவர் உடலுடன் 4 மணி நேரம் பயணம்

அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து கோவைக்கு வாரம் ஒருமுறை ரெயில் இயக்கப்படுகிறது. கடந்த 8-ந்தேதி சில்சாரில் இருந்து புறப்பட்ட ரெயில் நேற்று திருப்பூர் வந்தது. 

இந்தநிலையில் ரெயிலின் ‘எஸ் 3’ பெட்டியில் இருந்து முழுமையாக கம்பளி போர்த்திய நிலையில் இறந்தவரின் உடலை 2 பேர் தூக்கி வந்தனர்.
 
இதனை ‘சி.சி.டி.வி.’ கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்த திருப்பூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். 

அப்போது இறந்தவர் அசாம் சில்சார் பகுதியை சேர்ந்த அர்பிந்த்ராய்(வயது 30) என்பதும் பெங்களூருவில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.

மேலும் அவர் அசாம் சில்சாரில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை வருவதற்கு டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். 

நேற்று காலை 6:55 மணிக்கு ஜோலார்பேட்டையை ரெயில் வந்தடைந்த நிலையில் அர்பிந்த்ராய் இறங்கவில்லை.

அப்போது அவருடன் பயணித்த வடமாநில பயணிகள் சிலர் எழுப்பியபோது அர்பிந்த்ராய் எந்தவித அசைவும் இன்றி கிடந்தார். மேலும் அவர் இறந்துள்ளதும் தெரியவந்தது. 

இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் சிலர் அர்பிந்த்ராய் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து அவரது உறவினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அப்போது உறவினர்கள் ‘திருப்பூரில் அர்பிந்த்ராய் உடலை இறக்கி வையுங்கள். நாங்கள் வந்து விடுகிறோம் என்று கூறியுள்ளனர். அதனை நம்பி உடனிருந்தவர்கள் அர்பிந்த்ராய் உடலுடன் திருப்பூர் வரை 4 மணி நேரம் பயணமாகி வந்துள்ளனர்.

திருப்பூருக்கு காலை 11 மணிக்கு ரெயில் வந்தடைந்ததும் வடமாநில பயணிகள் சிலர் அர்பிந்த்ராய் உடலை அங்கு இறக்கி வைத்துள்ளனர். 

இதனை போலீசார் சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணித்து உடலை மீட்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அர்பிந்த்ராய் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பிரேத பரிசோதனை முடிவில் அர்பிந்த்ராய் மரணம் குறித்து உண்மை விவரம் தெரியவரும். மேலும் அர்பிந்த்ராயின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via