திருநெல்வேலி எழுச்சி தினம் 

by Editor / 13-03-2022 07:03:11pm
 திருநெல்வேலி எழுச்சி தினம் 

 

விபின் சந்திரபால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 1908 ஆம்-ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி  சுயராஜ்ய நாளாக விடுதலைப் போராட்ட வீரர்கள் கொண்டாடினர். நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் தடையை மீறி விபின் சந்திரபால் விடுதலை விழா எழுச்சியோடு நடந்தது. இதேபோன்று தூத்துக்குடியில் விபின் சந்திரபால் விடுதலை விழாநடைபெற்றது.இந்த விழாவை  கொண்டாடிவிட்டு நெல்லைக்கு வந்த வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் உள்ளிட்டவர்கள் 1908ம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இதன் எதிரொலியாக நெல்லை பகுதியில் கலவரம் மூண்டது.

அடுத்த நாள் (மார்ச் 13) அடித்தட்டு மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இந்த கிளர்ச்சியில் திருநெல்வேலி சந்திப்பில் தற்போதுள்ள ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில், அப்போது செயல்பட்ட ம.தி.தா. இந்து கலாசாலை மாணவர்களும் முக்கிய பங்கு வகித்தனர். இந்த கிளர்ச்சியில் பொதுச்சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. நிலமையை கட்டுக்குள் கொண்டுவர ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அடக்குமுறையைக் கையாண்டனர். 

சி.எம்.எஸ்., கல்லூரிக்குள் புகுந்த கூட்டம், உதவிப்பேராசிரியரைத் தாக்கியது. கல்லூரி சேதப்படுத்தப்பட்டது. நெல்லை நகராட்சி அலுவலக கட்டடச்சுவர் இடிக்கப்பட்டது. அலுவலக ஆவணங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அருகே இருந்த அஞ்சல் நிலையம் தீ வைக்கப்பட்டது. நகராட்சியின் மண்ணெண்ணெய்க் கிடங்கு சேதப்படுத்தப்பட்டது. முன்சீப் கோர்ட், காவல் நிலையம் தாக்கப்பட்டது.

கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். கோயில் பூசாரி, முஸ்லிம் இளைஞர் உள்ளிட்ட 4 பேர்  இறந்தனர். 

நெல்லையில் விடுதலை உணர்வுடன் மக்கள் நடத்திய எழுச்சிப்போராட்டத்தில் நால்வர் பலியான நிகழ்வு குறித்து பிரிட்டன்  நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. சென்னை சட்டசபையில் விவாதம் நடந்தது.  கலவரத்தில் ஈடுபட்டதாக 53 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லையில் அனைத்துத்தரப்பு மக்களும் இணைந்து நடத்திய ‘திருநெல்வேலி எழுச்சி’ போராட்டம் பிற்காலத்தில் நடந்த பல போராட்டங்களுக்கு அடித்தளமாக அமைந்தது.சுதந்திர போராட்டகளத்திற்கு தூபம் போட்டு தீபம் ஏற்றிய ‘திருநெல்வேலி எழுச்சி’ போராட்டம் விழிப்புணர்வு இல்லாமல் வெறும் எழுத்துக்களில் மட்டுமே உள்ளது.

 திருநெல்வேலி எழுச்சி தினம் 
 

Tags :

Share via