ரயில் பயணச் சீட்டுகளை முறைகேடாக பதிவு ரூபாய் 4.42 லட்சம் மதிப்பு பயணச்சீட்டுகள் பறிமுதல்

by Editor / 03-04-2022 10:12:38am
ரயில் பயணச் சீட்டுகளை முறைகேடாக பதிவு ரூபாய் 4.42 லட்சம் மதிப்பு பயணச்சீட்டுகள் பறிமுதல்

கொரோனா தொற்றுக்கு பிறகு அனைத்து விரைவு ரயில்களும் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களுக்கான முன்பதிவு பயணச் சீட்டுகள் முழுவதும் விரைவாக பதிவு  செய்யப்பட்டு வருகிறது. இதில் இடைத்தரகர்கள் பயணிகளுக்கு இயல்பாக கிடைக்கவேண்டிய முன்பதிவு பயணச் சீட்டுகளை அதிக அளவில் பதிவு செய்து முறைகேடு நடக்க வாய்ப்பிருக்கிறது. எனவே இதை தடுக்க கடந்த மார்ச் மாதம் முழுவதும் மதுரை கோட்டத்தில் பல்வேறு தனியார் நடத்தும் பயணச் சீட்டு முன்பதிவு மையங்களில் ரயில்வே பாதுகாப்பு படை குற்றப்பிரிவு அலுவலர்கள் அதிரடி சோதனைகள் நடத்தினர். மேலும் அங்கீகாரம் இல்லாத  தனிநபர்கள் அதிக அளவில் பயணச் சீட்டுகளை பதிவு செய்வதும் கண்காணிக்கப்பட்டது. இதில் 33 இடைத்தரகர்கள் 2 அங்கீகாரம் பெற்ற முகவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து ரூபாய் 4,41,686 மதிப்புள்ள 444 முன்பதிவு ரயில் பயணச் சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக இணையதள பயனாளர் ‌பதிவில் இருந்த அவர்களது 151 மின்னஞ்சல் முகவரிகள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த 444 பயணச்சீட்டுகளின் ரயில்வே முன்பதிவு ரத்து செய்யப்பட்டு முறையாக பெறவேண்டிய பயணிகள் பயன்பாட்டுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த அதிரடி சோதனைகள் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் அவர்களது ஆலோசனையின் பேரில் ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் வி.ஜே.பி.அன்பரசு, துணை ஆணையர் ஆர்.சுபாஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. அகில இந்திய அளவில் நடைபெற்ற அதிரடி சோதனைகளில் 1118 இடைத்தரகர்கள் 341 அங்கீகாரம் பெற்ற முகவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களது 366 இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக முகவர் அனுமதி மற்றும் 6751  மின்னஞ்சல் முகவரிகள் ரயில் பயணச்சீட்டு பதிவு செய்வதில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளது. ரூபாய் 65 லட்சம் மதிப்புள்ள ரயில் பயணச் சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த முறைகேடாக பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகள் ரத்து செய்யப்பட்டு அந்த காலி இடங்கள் பொது பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. முறையான பயணிகளின் நலனுக்காக இந்த சோதனைகள் தொடர்ந்து நடைபெறும். முறைகேடாக பதிவு செய்யப்பட்ட பயணச் சீட்டுகளை வாங்குவதும் குற்றமாக கருதப்படும் மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கும் ஆளாக நேரிடும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது .

 

Tags : 4.42 lakh worth of train tickets confiscated

Share via