மார்க்சிய சிந்தனையாளர்  எஸ்.என். நாகராசன் காலமானார்

by Editor / 24-05-2021 06:17:52pm
  மார்க்சிய சிந்தனையாளர்  எஸ்.என். நாகராசன் காலமானார்


 

தமிழில் மார்க்சிய சிந்தனையை வளர்த்தெடுத்த பிரபல மார்க்சிய அறிஞர் எஸ்.என்.நாகராஜன் காலமானார்.
கோவையில் பிறந்த இவர் வேளாண்மை துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். வைணவம் போன்ற கீழைத்தத்துவங்களுடன் மார்க்சியத்தை இணைத்து சிந்திக்க வேண்டும் என கீழை மார்க்சியம் எனும் கருத்தாக்கத்தை முன்வைத்தவர். கம்யூனிச விடுதலையின் இலக்கம், வாழும் மார்க்சு உள்ளிட்ட பல புத்தகங்களை இவர் எழுதியுள்ளார்.
மார்க்சியக் கோட்பாடுகளை மண்ணின் மரபோடு இணைத்துக்கொண்டு செல்ல வேண்டும் என்பது அவரது கருத்து. இயங்கியல் கோட்பாடுகளைக் கூட எளிய மொழியில் தமிழ்ப்பழமொழிகள் மூலம் அவர் வெளிப்படுத்தினார். ஒரு சமூகத்தின் சாரம், பழமொழிகளில் உறைந்திருக்கிறது எனவும், இந்தியாவிலேயே தமிழில்தான் அதிகப் பழமொழிகள் உள்ளன எனவும் அடிக்கடி கூறி வந்தார். 
தவிர, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் அறிவுப்புலத்தில் செயல்பட்டவர்களுடன் தொடர் உறவில் இருந்தார். அஸ்கர் அலி எஞ்சினியர், இரஜினி கோத்தாரி, அஷீஷ் நந்தி போன்றவர்களோடு அவருக்கு இருந்த நட்பு குறிப்பிடத்தக்கது. குறிப்பாக புகழ்பெற்ற அறிஞர் நோம் சாம்ஸ்கியுடன் இறுதி வரை கடிதத் தொடர்பு கொண்டிருந்தார்.பிராமணராகப் பிறந்திருந்தாலும், படிக்கும் காலத்திலேயே பூணூலை நீக்கிவிட்டார். பொதுவாழ்வில் செயல்படக்கூடியவர்கள், தம்மைச் சாதி நீக்கம், வர்க்க நீக்கம் செய்துகொள்ள வேண்டும் என அவர் குறிப்பிடுவார். அறிவுச் செருக்கு, செல்வச் செருக்கு, சாதிச்செருக்கு ஆகியவற்றை நீக்கியவனே மனிதன் என்பது அவரது முடிவு.இந்த நிலையில் அவர் உடல்நலகுறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via