ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் பிரமாண்ட வெற்றி

by Editor / 30-05-2022 07:54:03am
ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்  பிரமாண்ட  வெற்றி

ஐபிஎல் தொடரின் பிரமாண்ட இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் இறங்கினர். அணியின் எண்ணிக்கை 31 ஆக இருக்கும்போது ஜெய்ஸ்வால் 22 ரன்னில் அவுட்டானார்.

அடுத்து இறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 14 ரன்னில் நடையை கட்டினார். தேவ்தத் படிக்கல் 2 ரன்னில் ஏமாற்றினார். ஓரளவு தாக்குப் பிடித்து ஆடிய ஜோஸ் பட்லர் 39 ரன்னில் வெளியேறினார். ஹெட்மயர் 11 ரன்னிலும், அஸ்வின் 6 ரன்னிலும், டிரெண்ட் போல்ட் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களை எடுத்துள்ளது.

குஜராத் சார்பில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட், சாய் கிஷோர் 2 விக்கெட், ரஷீத் கான், யாஷ் தயாள், ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 131 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க வீரர் சாஹா 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் போல்டானார்.

அவரை தொடர்ந்து களமிறங்கிய வேட் 8 ரன்களில் ஆட்டமிழக்க போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதன் பிறகு ஜோடி சேர்ந்த சுப்மன் கில் - கேப்டன் பாண்டியா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் சஹால் இந்த ஜோடியை பிரித்து பாண்டியாவை 34 ரன்களில் வெளியேற்றினார்.

இருப்பினும் ஒருமுனையில் கில் நிதானமாக விளையாடி வர மில்லர் அவருடன் சிறப்பாக செயலபட்டார். இறுதியில் குஜராத் அணி 18.1 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அறிமுகமான முதல் தொடரிலேயே ஐபிஎல் கோப்பையில் பெயரை மின்னிட செய்தது குஜராத் அணி.குஜராத் அணிக்கு முதல்பரிசாக 20கோடி ரூபாயும்,2வது இடம்பிடித்த ராஜஸ்தானுக்கு 13கோடியும்ரூபாயும் ,3வது  இடம் பிடித்த ஆர்,சி,பி.அணிக்கு 7கோடி ரூபாயும் 4வது இடம் பிடித்த லக்னோ அணிக்கு 6.5 கோடி ரூபாயும் வழங்கப்பட்டது.

 

Tags :

Share via