11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைமுறை தொடரும் – அமைச்சர்

by Editor / 15-08-2022 03:21:56pm
11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைமுறை தொடரும் – அமைச்சர்


11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைமுறை தொடரும், மாணவர்கள் தன்னம்பிக்கையை இழந்துவிடக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

75-வது சுதந்திர தினம் பவள விழா கொண்டாட்டமாக சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாரத சாரண, சாரணியர் இயக்க மாநில தலைமை அலுவலகத்தில் சாரண, சாரணியர் இயக்க புரவலரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் தேசியக்கொடியை ஏற்றி பின்னர் சாரண, சாரணியர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், சாரண சாரணியர் இயக்கத்தில் உள்ள மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். இதற்காக பள்ளிக் கல்வித் துறை சார்பில் முதலமைச்சருக்கு நன்றி. தனியார் பள்ளிகள் 11-ம் வகுப்பு பாடங்களை முறையாக நடத்துவதில்லை என்பதால் தான் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கொண்டு வரப்பட்டது. அதில், குழப்பம் தேவையில்லை. 11ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைமுறை தொடரும். மாணவர்கள் தன்னம்பிக்கையை இழந்துவிடக் கூடாது.

கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் பள்ளி விவகாரத்தில் பெற்றோர்களின் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளது. சக்தி மெட்ரிக் பள்ளியில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளைத் தொடங்குவது பற்றி பெற்றோர்களின் கருத்தறிந்து முடிவு செய்யப்படும். 25,000 கழிப்பறைகள் கட்டப்பட வேண்டும். கிடைக்குக் நிதியைக் கொண்டு படிப்படியாக கழிப்பறைகள் கட்டப்படும். 3 மாதங்களுக்கு ஒருமுறை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்படும்.

கல்வித் தொலைக்காட்சி CEO, RSS உள்ளிட்ட எந்த பின்புலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவருடைய செயல்பாடுகள் சரியாக இருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும். அரசு எச்சரிக்கையாக இருக்கிறது என தெரிவித்தார்.


 

 

Tags :

Share via