சுற்றுலாப் பயணிகள் கண்முன்னே 200 அடி தாழ்வான பள்ளத்தாக்கில் குதித்து பெண் தற்கொலை

by Editor / 28-08-2022 06:52:33pm
 சுற்றுலாப் பயணிகள் கண்முன்னே 200 அடி தாழ்வான பள்ளத்தாக்கில் குதித்து பெண் தற்கொலை

நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா சிகரத்திற்கு சுற்றுலா வந்த பெண், சக சுற்றுலாப் பயணிகள் கண்ணேதிரே 200 அடி தாழ்வான பள்ளத்தாக்கில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ளது தொட்டபெட்டா சிகரம், தென்னிந்தியாவிலேயே உயர்ந்த சிகரமாகும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா ஸ்தலங்களில் ஒன்றான தொட்டபெட்டா காட்சி முனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். வார விடுமுறை நாளான இன்று, அதிக அளவு சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா காட்சி முனைக்கு வந்து, இயற்கை அழகை கண்டு ரசித்து கொண்டிருந்தனர்.

அப்போது, தொட்டபெட்டா காட்சி முனை பகுதியில் தடுப்பு வேலியை தாண்டி வயதான பெண் ஒருவர், பாறை மீது நின்றிருந்ததை பார்த்த சுற்றுலா பயணிகள், அவரை அங்கிருந்து வருமாறு கூச்சலிட்டனர். தொட்டபெட்டா காட்சி முனையில் அமைந்துள்ள ஆபத்தான சுமார் 200 அடிக்கும் மிக தாழ்வான பள்ளத்தாக்கு பகுதிக்குச் சென்ற அவர், சுற்றுலா பயணிகளின் கண்ணெதிரே திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த உதகை வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர், தற்கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். தற்கொலை செய்து கொண்ட மூதாட்டியின் உடலை தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட பெண் வைத்திருந்த கைப்பையில், அவரின் ஆதார் அட்டை அட்டை இருந்ததாகவும், அதை வைத்து இறந்த அந்தப் பெண், கோவை மாவட்டம் தடாகம் பகுதியை சேர்ந்த நல்லத் தம்பி என்பவரின் மனைவி லீலாவதி என்பது தெரிய வந்தது.

மலை உச்சியில் இருந்து அந்த வயதான பெண், சுற்றுலாப் பயணிகளின் கூச்சலையும் பொருட்படுத்தாமல் கீழே குதித்து தற்கொலை செய்தபோது, அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர், தனது செல்ஃபோனில் பதிவு செய்துள்ளார். நெஞ்சை பதைபதைக்க வைத்த இந்த சம்பவம் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

 

Tags : பள்ளத்தாக்கில் குதித்து பெண் தற்கொலை

Share via