சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்வதால் குளிர்ச்சியான சூழல்.

by Editor / 29-08-2022 09:40:19am
சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்வதால் குளிர்ச்சியான சூழல்.

தமிழ்நாட்டின் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.

இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, கோவை, கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுதாங்கல், மாம்பலம், பல்லாவரம், எழும்பூர், புரசைவாக்கம், தாம்பரம், வண்டலூர், பெருங்களத்தூர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை காணப்படுகிறது. இந்த மழையால்  வெப்பம் தணிந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

Tags :

Share via