ஜெ.அன்பழகன் நினைவு தினம்; அவர் ஆற்றிய களப்பணிகள் மக்கள் நெஞ்சங்களில் என்றும் இருக்கும்: முதல்வர்

by Editor / 10-06-2021 02:23:37pm
ஜெ.அன்பழகன் நினைவு தினம்; அவர் ஆற்றிய களப்பணிகள் மக்கள் நெஞ்சங்களில் என்றும் இருக்கும்: முதல்வர்

ஜெ.அன்பழகன் ஆற்றிய களப்பணிகள் மக்கள் நெஞ்சங்களில் என்றும் இருக்கும் என, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளராகவும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்எல்ஏ ஆகவும் இருந்தவர் ஜெ.அன்பழகன். இவர் கடந்த ஆண்டு ஜூன் 10 அன்று கரோனா தொற்றால் உயிரிழந்தார். அன்றைய தினம் அவருடைய 62-வது பிறந்த நாளாகும். பிறந்த நாளிலேயே அவர் உயிரிழந்த சம்பவம், திமுகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஜெ.அன்பழகனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, திமுகவினர் நலத்திட்டங்களைப் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இது தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 10) தன் ட்விட்டர் பக்கத்தில், "திமுகவின் மாவீரன், என் நெஞ்சம் நிறைந்த அன்பு உடன்பிறப்பாம் ஜெ.அன்பழகனை நாம் பிரிந்து ஓராண்டாகிறது.

அவர் ஆற்றிய களப்பணிகள் மக்கள் நெஞ்சங்களில் என்றும் இருக்கும்!

மக்கள் நலன் காத்த மகத்தான தொண்டரான அவரது கனவுகளை திமுக அரசின் வழியாக நிறைவேற்றி என்றென்றும் அவர் நினைவைப் போற்றுவோம்!" எனப் பதிவிட்டுள்ளார்.

ஜெ.அன்பழகன் நினைவு தினம்; அவர் ஆற்றிய களப்பணிகள் மக்கள் நெஞ்சங்களில் என்றும் இருக்கும்: முதல்வர்
 

Tags :

Share via