விமானத்தின் தரத்தில் இந்தியாவின் புல்லட் ரயிலாக வலம் வரத்தொடங்கிய வந்தே பாரத் விரைவு ரயில்

by Editor / 01-10-2022 08:49:13am
விமானத்தின் தரத்தில் இந்தியாவின் புல்லட்  ரயிலாக வலம்  வரத்தொடங்கிய வந்தே பாரத் விரைவு ரயில்

மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் விரைவு ரயில் அதிக சிறப்பம்சங்கள் நிறைந்து காணப்படுகிறது. அப்படி என்ன சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்..

வந்தே பாரத் விரைவு ரயில் பிற ரயில்களைக் காட்டிலும் முற்றிலும் தனித்துவமான கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருக்கின்றன. பயோ வேக்யூம் கழிவறைகள், ஒய்-ஃபை வசதி, முழு தானியங்கி கதவுகள் மற்றும் சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் இயங்கும் திறன் என பன்முக சிறப்புகளைக் கொண்டதாக இந்த ரயில்கள் காட்சியளிக்கின்றன.

மேலும் இந்த ரயில்கள் சுய எஞ்ஜின் கொண்டவை ஆகும். ஆகையால், தற்போது பயன்பாட்டில் உள்ள எக்ஸ்பிரஸ் ரயில்களில் இருந்து இது பல மடங்கு மாறுபட்டுக் காட்சியளிக்கும். அதாவது, புல்லட் மற்றும் மெட்ரோ ரயில்களின் செயல்பாடு போன்று இந்த ரயிலின் செயல்திறன் உள்ளது. பிரதமர் மோடி அறிமுகம் செய்த ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் கடந்த 2019-லேயே இந்த ரயில்கள் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டன. 

வந்தே பாரத் விரைவு ரயில்கள் டெல்லி – வாரணாசி, டெல்லி – கத்ரா ஆகிய இரு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது காந்திநகர் முதல் மும்பை வரையில் இயக்கப்படுகின்றன. இந்த எண்ணிக்கையை விரைவில் பல மடங்கு உயர்த்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் வந்தே பாரத் ரயிலை மேலும் பல மடங்கு நவீன மயமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


சென்னை ஐசிஎஃப், கபுர்தலா ரயில் பெட்டி தொழிற்சாலை, ரேபரேலியில் உள்ள நவீன பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை ஆகிய தொழிற்சாலைகளில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில், ஐசிஎஃப்-ல் மட்டும் 22 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கும் பணி முதற்கட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒரு ரயிலைத் தயாரிக்க சுமார் ரூ.110 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் 
 

முன்பு தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் 160 கிமீ வேகத்தை அடைய 146 விநாடிகள் ஆகின. இந்த ரயிலில் 140 விநாடிகளில் இந்த வேகத்தை அடைய முடியும். ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் அனைத்து மின்வசதிகளும் நின்று விட்டாலும், தனித்து இயங்கும் 4 அவசர கால விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. நடைமேடை திசையில் பின்புறம் மற்றும் முன்புறத்தை கண்காணிக்கும் வகையில், 4 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


வெப்பம் மற்றும் குளிர் காற்று சீராக சென்று வர அதிசக்தி கொண்ட கம்ப்ரெசர் மற்றும் காற்றில் கிருமிகளை அழித்து சுத்தம் செய்து பெட்டியின் உள் அனுப்ப புறஊதா (Ultra Violet) விளக்குகள் இடம்பெற்றுள்ளன. தீ ஏற்பட்டால் அதை அணைக்க தீ உணர்வுக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. பயணிகள் தகவல் அறிய முன்பிருந்து 24 அங்குல திரைக்கு பதிலாக, 32 அங்குல திரை வசதி செய்யப்பட்டுள்ளது. 

ரயிலின் இயக்கம், கருவிகளின் செயல்பாடு மற்றும் குளிர் வசதியைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க கட்டுப்பாட்டு அறையுடன் ஜிபிஎஸ் வசதி இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் 4 அவசர கால வெளியேற்று ஜன்னல்கள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளன. ரயில் தடத்தில் நீர் இருந்தால் 400 மிமீ வரை தாக்குப் பிடிக்கும் நீர்காப்பு வசதிக்குப் பதிலாக, தற்போது 650 மிமீ வரை தாங்கும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

ரயிலின் இயக்குநர் மற்றும் காவலர் (Guard) ஆகியோரிடையே நேரடி உரையாடல் வசதி மற்றும் அதைப் பதிவு செய்யும் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. ஒரே தடத்தில் வரும் ரயில்களிடையே மோதல் ஏற்படுவதைத் தடுக்க ஜிபிஎஸ் அடிப்படையிலான ‘கவச்’ என்றழைக்கப்படும் ரயில் பாதுகாப்பு கண்காணிப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு இருக்கையின் கைப்பிடியிலும் பார்வையற்ற பயணிகளின் வசதிக்காக, பிரெய்லி எழுத்துகள் உள்ளிட்டவை வந்தே பாரத் விரைவு ரயிலில் இடம்பெற்றுள்ளன.

மேலும் லக்கேஜ்களை பத்திரமாக வைத்துக் கொள்ள மாடுலர் ரேக்குகள், செல்போன்களை சார்ஜ் செய்து கொள்ள சாக்கெட், அமைதியான உட்புறம், ரீடிங் லைட்டுகள், ஆட்டோ சென்சார் டேப்புகள், உணவு பொருட்களை பதமாக வைத்துக் கொள்ளும் வகையில் பிரத்யேக உணவு சேமிப்பு பெட்டி என பல அம்சங்களை தாங்கியதாகவும், நட்சத்திர ஓட்டலுக்கு இணையாக இந்த வந்தே பாரத் விரைவு ரயில்கள் இருக்கின்றன.மொத்தத்தில் இந்தியாவின் புல்லட் ரயில் என்றே இந்த ரயிலை சொல்லலாம்.

 

விமானத்தின் தரத்தில் இந்தியாவின் புல்லட்  ரயிலாக வலம்  வரத்தொடங்கிய வந்தே பாரத் விரைவு ரயில்
 

Tags :

Share via