6 இடங்களில் பெரிய அகன்ற திரைகள் மூலம் கந்தசஷ்டி அனைத்து நிகழ்வுகளும் ஒளிபரப்பப்படும்

by Editor / 22-10-2022 09:44:26am
 6 இடங்களில் பெரிய அகன்ற திரைகள் மூலம் கந்தசஷ்டி அனைத்து நிகழ்வுகளும் ஒளிபரப்பப்படும்

திருச்செந்தூரில் பக்தர்கள் விரதம் இருக்க கூடுதல் கொட்டகைகள் அமைக்கப்படும் என்றும், 6 இடங்களில் பெரிய அகன்ற திரைகள் மூலம் கந்தசஷ்டி அனைத்து நிகழ்வுகளும் ஒளிபரப்பப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வருகிற 25ஆம் தேதி செவ்வாய்க்கிழமை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. கந்தசஷ்டி திருவிழா முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா வருகிற 25ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1. 30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது. அதிகாலை 5. 30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்படுகிறார். காலை 7. 30 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. சுவாமி தங்க சப்பரத்தில் எழுந்தருளல் தொடர்ந்து காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். நண்பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனையை தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி- தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு மகா தீபாராதனை நடைபெறும்.

மதியம் 3 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனையை தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமி- அம்பாள்களுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் சுவாமி- அம்பாள்கள் கிரி வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். கந்தசஷ்டி திருவிழா முதல் நாளன்று சூரியகிரகணம் நடைபெறுவதால் மாலை 4 மணிக்கு சுவாமிக்கு பட்டு சாத்தி, கோவில் நடை அடைக்கப்படுகிறது.

பின்னர் சூரியகிரகணம் முடிந்ததும், மாலை 6.45 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு, மற்ற கால பூஜைகள் நடைபெறும். சுவாமிக்கு மகா தீபாராதனை 2ஆம் திருநாளான 26ஆம் தேதி புதன்கிழமை முதல் 5ஆம் திருநாளான 29ஆம் தேதி சனிக்கிழமை வரையிலும் தினமும் காலை 7 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்குகிறது. மதியம் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனையை தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வேல்வகுப்பு, வீரவாள்வகுப்பு முதலிய பாடல்களுடன் மேளவாத்தியங்களுடனும் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெறும். பின்னர் மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளும் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெறுகிறது.

தொடர்ந்து சுவாமி கிரி வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து மீண்டும் கோவில் சேர்கிறார். 30ஆம் தேதி சூரசம்ஹாரம் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6ஆம் திருநாளான வருகிற 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் நடக்கிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் யாகசாலையில் தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.

அங்கு மகா தீபாராதனையை தொடர்ந்து சுவாமி-அம்பாள்களுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடைபெறும். மாலை 4 மணியளவில் கடற்கரையில் எழுந்தருளும் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு, திருச்செந்தூரில் பக்தர்கள் விரதம் இருக்க கூடுதல் கொட்டகைகள் அமைக்கப்படும். 6 இடங்களில் பெரிய அகன்ற திரைகள் மூலம் கந்தசஷ்டி அனைத்து நிகழ்வுகளும் ஒளிபரப்பப்படும். இவ்வாறு கூறினார்.

 

Tags :

Share via