முதுகு வலியால்  தவிக்கும் பணியாளர்களுக்கு.. டிப்ஸ் 

by Admin / 26-07-2021 06:18:03pm
முதுகு வலியால்  தவிக்கும் பணியாளர்களுக்கு.. டிப்ஸ் 

அனைத்து அலுவலகங்களிலும் ஊழியர்கள் அமர்ந்து வேலை செய்வதற்கான ஷோபாக்கள், ஷேர், டேபிள் போன்றவை அந்தந்த பணிகளுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் அதே வேலையினை வீட்டில் இருந்து பார்ப்பதால் எந்த வசதியினையும் நம்மால் ஏற்படுத்திக்கொள்ள முடியாது. இதன் காரணமாக நாம் உடல் ரீதியாக பிரச்னைகளை எதிர்க்கொள்ள நேரிடும். குறிப்பாக நீண்ட நேரம் உட்கார்ந்து வேலைப்பார்ப்பதால் முதுகு தண்டுவடப்பகுதியில் அதிக அழுத்தம்  ஏற்படுத்துகிறது. எனவே தொடர்ந்து நாம் இதனை மேற்கொள்ளும் பொழுது ஸ்பாண்டிலைட்டிஸ் எனப்படும் முதுகு தண்டுவட அழற்சி உண்டாகிறது. இதனால் நாள்பட்ட கழுத்து மற்றும் முதுகு வலி ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 


இந்நேரத்தில் முதலில், ஸ்பாண்டிலோசிஸ்  (Spondylosis ) அங்கயலோசிங் ஸ்பாண்டிலைடிஸ் ( Spondylitis)  என்றால் எனத்தெரிந்துக்கொள்வோம். இவை இரண்டும் ஒரே மாதிரியான ஓசை தருவதால் பல நேரங்களில் மக்கள் குழப்பத்தினை சந்திக்கின்றனர். ஸ்பாண்டிலோசிஸ்  (Spondylosis ) என்பது முதுகெலும்புகள் மற்றும் குருத்தெலும்புகள் மற்றும் டிஸ்க்குகளில் (முதுகெலும்பு தட்டு) ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு நோயாகும். இது ஒரே நாளில் ஏற்படுவது அல்ல,சிறிது சிறிதாக ஏற்பட்டு முதுகு மற்றும் கழுத்து பகுதியில் தேய்மானம் ஏற்பட்டு  ஸ்பாண்டிலோசிஸ்ஸாக மாறுகிறது. வயதான காலத்தில் தான் இதுப்போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பார்கள். ஆனால் இப்பொழுது அதிகப்படியான அழுத்தத்தினை நம்முடைய உடல் உறுப்புகளுக்கு கொடுக்கும் பொழுது பிரச்சனை ஏற்படுகிறது. அடுத்ததாக அங்கயலோசிங் ஸ்பாண்டிலைடிஸ் ( Spondylitis)  என்பது மூட்டு வலியுடன் சேர்ந்து, முதுகுத்தண்டு வடத்திலும் வலி ஏற்படும்.


இதுப்போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதற்கு என்னென்ன வழிமுறை என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
 அலுவலகத்தில் இருப்பது போல் அனைத்து வசதிகளுடன் கூடிய நாற்காலிகள் டேபிள்கள் வாங்க முடியவில்லை என்றாலும், இருப்பதனை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதிக நேரம் கால்களை தரையில் படும்படி வைக்கக்கூடாது. நாம் நாற்காலியில் சிறிய டவல் ரோல் அல்லது தலையணையை முதுகுப்பகுதியில் வைத்துக்கொள்ள வேண்டும். நம்முடைய லேப்டாப், கணினி போன்றவற்றின் திரையினை கண் மட்டத்திலிருந்து 16 முதல் 30 அங்குல தூரத்தில் இருக்கும் படி அமைத்துக்கொள்ள வேண்டும்.


வீட்டில் இருந்து பணிபுரியும் பொழுது தொடர்ச்சியாக பணிபுரியாமல் ஒவ்வொரு 60 நிமிடங்களுக்கு ஒரு முறை பணியில் இடைவெளியினை எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்காக பணி செய்யும் இடத்திலேயே அமர்ந்து விடக்கூடாது, சற்று எழுந்து நிற்க வேண்டும். அதோடு இந்த இடைவெளியின் பொழுது கைகள் மற்றும் கால்களுக்கு ஏற்ற பயிற்சிகளை செய்ய வேண்டும். மேலும் தோள்பட்டை காதுகளில் படும் படியும், இடுப்பினை நிமிர்த்தி நேராக அடிக்கடி உட்கார்ந்து கொள்ளவேண்டும்.
நாம் 8 மணி நேரம் அல்லது அதற்கு மேற்பட்டு பணிபுரிந்தாலும் அடிக்கடி நாம் எழுந்து நடக்க வேண்டும். இவ்வாறு மேற்கொள்ளும் பொழுது சோர்வினைக்குறைத்து, மூட்டுகளுக்கு வேலையினை தருகிறது. இதனால் திசுக்களில் அதிக அழுத்தம் ஏற்படவாய்ப்பில்லை.
கணினியில் நீண்ட நேரம் உட்கார்ந்து பணிபுரிவது நமக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பிரச்சனையினை ஏற்படுத்துகிறது. எனவே வாரத்திற்கு ஒரு முறையாவது இதயத்திற்கு பயனுள்ள உடற்பயிற்சிகளை மேற்கொள்வதை கட்டாயமாக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது. குறிப்பாக ஏரோபிக்ஸ், ஜூம்பா, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், ஸ்கிப்பிங் அல்லது எளிமையான நடைபயிற்சி போன்றவற்றினையும் மேற்கொள்ளலாம். இதன் மூலம் உடல் எடையினை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.


 நாம் அதிக நேரம் ஒரே இடத்தில் இருந்து பணிபுரியும் பொழுது பல்வேறு பிரச்சனைகளை தவிர்க்க மேற்க்கூறியுள்ள முறைகளைப் பின்பற்ற வேண்டும். அதனை மீறியும் நீங்கள் தொடர்ச்சியான வலி, உணர்வின்மை, பலவீனம் மற்றும் அன்றாட நடவடிக்கைகளில் குறுக்கிடும் சிக்கல்களை எதிர்கொண்டால்  உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும். சில நேரங்களில் அதிகமான வலி ஏற்படும் பொழுது 2 அல்லது 3 நாள்கள் ஓய்வு எடுப்பது கட்டாயமான ஒன்று.  இதனைத்தொடர்ந்து பிசியோதெரபிஸ்ட் தெரிவிக்கும் எளிமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு படிப்படியாக இப்பிரச்சனை குறைக்க வழிவகை செய்ய வேண்டும்.
-பெல் ராஜ் 

 

Tags :

Share via