தொடரும் தலிபான்களின் ஆதிக்கம்: 43 பேர் படுகொலை

by Admin / 26-07-2021 06:15:09pm
தொடரும் தலிபான்களின் ஆதிக்கம்: 43 பேர் படுகொலை



ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள், பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 43 பேரை தலிபான்கள் படுகொலை செய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா பாதுகாப்பு படை வீரர்கள் வெளியேறிவரும் நிலையில், தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்துவருகிறது. 85 சதவிகித நிலபரப்பை கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், அப்பாவி மக்கள், பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 43 பேரை தலிபான்கள் படுகொலை செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதேபோன்ற, படுகொலை சம்பவங்கள் மற்ற பகுதிகளிலும் நடந்தேறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

படுகொலை செய்யப்பட்டவரில் இருவர் சகோதரர்கள் ஆவர். இச்சம்பவம் குறித்து இவர்களின் தந்தை கூறுகையில், "குடும்பத்தாருடன் அப்பகுதியை விட்டு வெளியேறும்போது படுகொலை செய்யப்பட்டார்கள். இவர்கள், பாதுகாப்பு படை வீரர்களோ அரசு அலுவலர்களோ அல்ல" என்றார்.

காபூலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சமூக ஆர்வலர் மினா நாடேரி தலிபான்கள் நடத்திவரும் தாக்குதல் குறித்து கூறுகையில், "மலிஸ்தான் மாவட்டத்திற்கு சென்ற பிறகு தலிபான்கள் போர் குற்றத்தில் ஈடுபட்டுவருகின்றனர். போரில் ஈடுபடாத இருவரை கொன்றுள்ளார்கள்.

மக்களின் வீடுகளில் கொள்ளையடித்த பின்பு தாக்குதல் நடத்தியுள்ளனர். வீடுகளை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்" என்றார். கந்தகார் மாகாணம் ஸிபின் புல்டாக் மாவட்டத்தில் மட்டும் 100 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக சமீபத்தில் செய்தி வெளியானது.

 

Tags :

Share via