நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட  ஆசை -நயினார் நாகேந்திரன் 

by Editor / 18-11-2022 08:08:23am
நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட  ஆசை -நயினார் நாகேந்திரன் 

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 86 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது அதனை ஒட்டி திருநெல்வேலி டவுன் பகுதியில் அமைந்துள்ள வ உ சிதம்பரனாரின் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்குப் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை அமைப்பு ரீதியான பணிகளை நாடாளுமன்றத் தேர்தலுக்காகச் செய்து வருகிறோம். அதிமுக பாஜக கூட்டணி என்பதில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை யார் தலைமையில் கூட்டணி என்பதிலும் எந்தவிதமான பிரச்சனை இல்லை என்றார்.

 மேலும், பத்து சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்பது எதிலும் இல்லை இந்த இட ஒதுக்கீட்டில் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் என பல தரப்பினரும் உள்ளனர். பத்து சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக எதிராக முடிவு எடுத்துள்ளது நீதிமன்றத்தையும் அவர்கள் நாடி உள்ளனர் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தனியாகத் தேர்தலைச் சந்திப்போம் என எந்த கட்சியும் சொல்ல முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு கட்சி ஆரம்பித்தால் கூட்டணியை வைக்கக் கூடாது என சட்டம் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் கூட்டணியாக இருந்தால் பலமாக இருக்கும் என தெரிவித்தார். கூட்டணி என்பது தேர்தலுக்கு மட்டுமே கொள்கை அளவில் யாரும் யாருடனும் கூட்டணி கிடையாது என்றார்.

மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுகள் உள்ளது சூழல் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளது நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடக் கட்சித் தலைமை வாய்ப்பு தந்தால் போட்டியிடுவேன். நெல்லை சட்டமன்றத் தொகுதியில் செய்த பணிகளை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்துச் செய்வேன் எனவும் அவர் பேசினார்.

 

Tags :

Share via