ஓட்டலில் வருமானம் இல்லாததால் விஷம் குடித்து உரிமையாளர் தற்கொலை

by Staff / 20-11-2022 03:10:12pm
ஓட்டலில்   வருமானம் இல்லாததால் விஷம் குடித்து உரிமையாளர் தற்கொலை

கோபி அருகே போதிய வருமானம் இல்லாததால் விஷம் குடித்து ஓட்டல் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு டி. என். பாளையம் கோபி அருகே போதிய வருமானம் இல்லாததால் விஷம் குடித்து ஓட்டல் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: - ஓட்டல் உரிமையாளர் கோபியை அடுத்த டி. என். பாளையம் அருகே உள்ள அத்தாணி செம்புளிச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 30). இவருடைய மனைவி தீபா என்கிற தீபலட்சுமி. இவர்களுடைய மகன் கிஷோர் (1½). கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள்ளிப்பட்டியில் வசித்துக்கொண்டு துரித உணவகம் நடத்தி வந்தார். ஆனால் அந்த உணவகத்தில் அவருக்கு போதிய வருமானம் இல்லை. இதனால் அவர் தொழிலை கைவிட்டார். இதைத்தொடர்ந்து டி. என். பாளையத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு அருகில் மனைவி குழந்தையுடன் சிவக்குமார் வசித்து வந்தார். மேலும் சிவக்குமார் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியில் செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு சிவக்குமார் சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பாததால், அவரை குடும்பத்தினர் பல இடங்களிலும் தேடிப்பார்த்து உள்ளனர். இதனிடையே வீட்டை விட்டு வெளியேறிய சிவக்குமார், கள்ளிப்பட்டியில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடப்பதாக அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. மேலும் இதுபற்றிய தகவல் அறிந்ததும் பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு விஷம் குடித்து சிவக்குமார் இறந்து கிடந்ததை கண்டனர். பின்னர் சிவக்குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Tags :

Share via