பிரதமருக்கு வழங்கிய பாதுகாப்பில் எவ்வித குறைபாடும் இல்லை: டிஜிபி சைலேந்திரபாபு

by Staff / 30-11-2022 01:47:29pm
பிரதமருக்கு வழங்கிய பாதுகாப்பில் எவ்வித குறைபாடும் இல்லை: டிஜிபி சைலேந்திரபாபு

சென்னையில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் பிரதமர் வருகையின்போது பாதுகாப்பு குறைபாடு இருந்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பிரதமர் வருகையின்போது, பாதுகாப்பில் குளறுபடிகள் நடந்ததாக எந்தவிதமான தகவலும் இல்லை. நல்ல முறையில் பாதுகாப்பு இருந்தது. அதுதொடர்பாக எந்த தகவல் பரிமாற்றங்களும் கிடையாது.

ஆனால், ஒவ்வொரு ஆண்டும் தமிழக காவல்துறை பயன்படுத்தக்கூடிய அனைத்துவிதமான உபகரணங்களும், பாதுகாப்பு உபகரணங்கள் உள்பட அனைத்தும் என்ன நிலையில் இருக்கின்றன என்பதை ஆய்வு செய்து, ஏதாவது உபகரணங்கள் காலாவதியாகியிருந்தால், அதனை மாற்றும் வழக்கம் பல ஆண்டுகளாக உள்ளது. அதுதான் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, இப்போது இருப்பதிலேயே தமிழக காவல்துறை வசம்தான் நல்ல தரமான உபகரணங்கள் உள்ளன. தற்போது இரண்டுபிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், மோப்ப நாய்களுடன் அந்தமான் சென்றனர். அங்கு பணி முடிந்து, திரும்ப உள்ளனர். அவர்களைத் திரும்பவும் கேரளாவுக்கு அனுப்ப இருக்கிறோம். இப்படி அண்டை மாநிலங்களுக்கு தமிழக காவல்துறை உதவி செய்துகொண்டிருக்கிறது. எனவே அதில் எந்தவிதமான குறைபாடுகளும் இல்லை. பழையனவற்றை மாற்றுவதும், புதியவற்றை வாங்குவதும் காலங்காலமாகச் செய்வது.

தமிழக காவல்துறையில் பழைய தொழில்நுட்பங்களை எல்லாம் பின்பற்றவில்லை. தமிழக காவல்துறையிடம் இருந்து மற்ற மாநிலங்கள் எல்லாம் கேட்டு வாங்குகின்றனர் என்றால், பழைய தொழில்நுட்பம் இருந்தால் எல்லாம் வாங்கமாட்டார்கள் அல்லவா. நவீன தொழில்நுட்பக் கருவிகளைத்தான் வைத்திருக்கிறோம். தமிழக காவல்துறை வசம் அளவுக்கு அதிகமாகவே உபகரணங்கள் உள்ளன. கிட்டத்தட்ட இரண்டு மடங்கு உபகரணங்கள் உள்ளன.

அதேநேரம் எதை வைத்திருக்க வேண்டும், எதை களைய வேண்டும் என்ற பயிற்சிக்கான நிலையாணை உள்ளது. அந்த நிலையாணையைத்தான் பின்பற்றுகிறோம். மேலும், பிரதமர் வருகையின்போது, பாதுகாப்பு குறைபாடு என்று எஸ்பிஜியிடம் இருந்து எந்தவிதமான தகவலும், குற்றச்சாட்டும் இல்லை. ரொம்ப சிறப்பாக நடந்து முடிந்ததாகத்தான் வாய்மொழியாக அவர்கள் சொல்கின்றனர் என்று அவர் கூறினார்.

 

Tags :

Share via