லடாக் எல்லையில்  50 ஆயிரம் இந்திய வீரர்கள் குவிப்பு

by Editor / 29-06-2021 06:01:56pm
லடாக் எல்லையில்  50 ஆயிரம் இந்திய வீரர்கள் குவிப்பு

 

 

இந்திய எல்லைப் பகுதிக்குள் சீன ராணுவத்தினர் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சீன எல்லைப் பகுதியில் 3 முக்கிய இடங்களில் போர் விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.அதே சமயம் சீன ராணுவம் கூடுதலான படையினரை திபெத்தில் இருந்து ஜிங்ஜியாங் ராணுவ தளத்துக்கு அனுப்பியுள்ளது. மேலும், போர் விமானங்கள், நீண்ட தூரம் தாக்கும் பீரங்கிகள் போன்றவற்றையும் எல்லைப் பகுதியில் சீனா நிறுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு சீனா ராணுவத்தினருக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்தியா-சினா எல்லை பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வந்தது. இதையடுத்து இருதரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டன.இதனை தொடர்ந்து இருநாட்டு ராணுவ அதிகாரிகள் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, எல்லையில் படைகள் ஓரளவு திரும்ப பெறப்பட்டன. எனினும், சீன ராணுவத்தினரின் அத்துமீறலால் அவ்வப்போது பதற்றம் நிலவுவதால் படைகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படவில்லை. சீன எல்லையில் இப்போது 2 லட்சம் இந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், கூடுதலாக மேலும் 50 ஆயிரம் வீரர்களை சீன எல்லையில் நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வீரர்களை உயரமான லடாக் பகுதிக்கு வீரர்களைக் கொண்டுச் செல்ல கூடுதலாக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிஏஈ சிஸ்டம்ஸ் நிறுவனம் உருவாக்கியிருக்கும் M777 பீரங்கிகளும் லடாக் பகுதிக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளன.கிழக்கு லடாக் பகுதிக்கு நேரில் சென்று நிலைமையைப் பார்வையிட்ட மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், வீரர்களிடம் உரையாற்றினார். அண்டை நாடுகளோடு பிரச்சனையை சுமுகமாகப் பேசித் தீர்த்துக் கொள்ளத்தான் இந்தியா விரும்புகிறது என்றார். இந்தியாவை மிரட்டினாலோ அல்லது ஆத்திரத்தைத் தூண்டும் விதத்தில் நடந்து கொண்டாலோ... இந்தியா பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. பதிலடி கொடுக்கும் என்று எச்சரித்தார்.

 

Tags :

Share via