தீயணைப்பு வீரர் கஞ்சா கடத்தி கைது....

by Staff / 08-01-2023 12:32:56pm
தீயணைப்பு வீரர் கஞ்சா கடத்தி கைது....

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சை நோக்கி வெள்ளிக்கிழமை இரவு சொகுசு காரில் கஞ்சா கடத்தல் கும்பல் வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளிலும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
பட்டுக்கோட்டை- தஞ்சை பிரதான சாலை பாப்பாநாட்டில் ஆய்வாளர் இளங்கோவன் தலைமையில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தபோது, ஒரு கார் அந்த இடத்தை வேகமாக கடந்து சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த பாப்பாநாடு காவல்துறையினர் அருகில் உள்ள ஒரத்தநாடு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து ஒரத்தநாடு புறவழிச்சாலையில் சாலையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பொன்னியின்செல்வன் தலைமையில் காவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வக்கீல் ஸ்டிக்கர் ஒட்டிய ஒரு சொகுசு காரில் வந்த 3 நபர்கள் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து, காவல்துறையினர் விரட்டிச் சென்று ஒருவரை மடக்கி பிடித்தனர். மற்ற இருவரும் தம்பி ஓடி விட்டனர். இதையடுத்து காரில் இருந்த 2 கிலோ கஞ்சாவையும் காவல்துறையினர் கைப்பற்றினர். தொடர்ந்து பிடிபட்ட நபரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில், அந்த நபர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், இவர் அந்த பகுதியில் தீயணைப்பு வீரராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து தொடர்புடைய தீயணைப்பு படை வீரரை தனிப்படையினர் வசம் ஒப்படைத்தனர். அவரை பட்டுக்கோட்டைக்கு அழைத்து சென்று தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடியவர்களை தேடி வருகிறார்கள்.

 

Tags :

Share via