திமுக வெற்றி வழங்கப்பட்டதல்ல, வாங்கப்பட்டது: டிடிவி தினகரன்

by Staff / 03-03-2023 02:25:02pm
திமுக வெற்றி வழங்கப்பட்டதல்ல, வாங்கப்பட்டது: டிடிவி தினகரன்

மதுரையில் முன்னாள் எம்எல்ஏ மகள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வருகை தந்தார். பின் மதுரை கோச்சடையில் உள்ள தனியார் விடுதியில் செய்திகளை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவு அனைவருக்கும் தெரிந்தது தான். அனைத்து சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் ஆளுங்கட்சி தான் வெற்றி பெரும். ஆளுங்கட்சிக்கு வாக்களித்தால் தொகுதிக்கு ஏதாவது நடைபெறும் என மக்கள் நினைத்து வாக்களிக்கின்றனர். திமுக மேல் 21 மாதங்களிலேயே மக்கள் கடும் அதிப்தியில் இருக்கின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது எதற்கெல்லாம் போராடினார்களோ, கருப்புக் கொடி ஏந்தி போராடினார்களோ அதையெல்லாம் மறந்துவிட்டார்.தேர்தல் வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றாமல் பல வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக ஸ்டாலின் தெரிவிக்கிறார்.

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் 10% ஊழல் நடைபெற்று இருந்தால், இப்போது விலைவாசி உயர்வு போல் இந்த ஆட்சியில் ஊழல் அதிகமாகி விட்டது. திமுக 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாததால் காஞ்ச மாடு புல்வெளியில் மேய்ந்தது போல் மேய்கின்றனர். ஈரோடு இடைத்தேர்தலில் ஒரு வாக்குக்கு 20 ஆயிரம் முதல் 30,000 வரை திமுகவினர் செலவு செய்துள்ளனர் ஈரோடு இடைத்தேர்தல் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் பிரதிபலிக்காது. அதனால் இந்த வெற்றி ஸ்டாலின் பெற்ற வெற்றி இல்லை. அது காசு கொடுத்து வாங்கப்பட்ட வெற்றி. வெற்றியை காசு கொடுத்து வாங்கிவிட்டு தற்போது ஸ்டாலின் பெருமையாக பேசி வருவது வேடிக்கையாக உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து இந்த 20 மாதத்தில், மக்கள் எந்த அளவுக்கு அதிருப்தியில் உள்ளனர் என உளவுத்துறை மூலம் ஸ்டாலினுக்கு தெரியாமல் இருக்காது என தினகரன் விமர்சித்தார் .

பின்னர் அதிமுகவின் நிலை குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், இரட்டை இலை சின்னம் இல்லாமல் அதிமுக போட்டி போட்டிருந்தால் இதைவிட மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பார்கள். அதிமுகவினர் ஒன்றிணைந்தால் மட்டுமே திமுக என்ற தீய சக்தியை வீழ்த்த முடியும். ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைந்து எடப்பாடி என்ற தீய சக்தி இல்லாமல் செய்தால், ஆர்கே நகர் இடைத்தேர்தல் போன்ற வெற்றியை பெற முடியும். அதிமுகவின் இதுபோன்ற தொடர் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி மட்டும் தான் காரணம். அவர் தலைமையில் அதிமுகவில் இணைய வாய்ப்பில்லை என கடுமையாக விமர்சித்த தினகரன், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மமே மீண்டும் வெல்லும் என கூறினார்.

 

Tags :

Share via