திமுகவில் இணைந்த ராசிபுரம் முன்னாள் எம்எல்ஏ

by Editor / 12-07-2021 09:20:21am
திமுகவில் இணைந்த ராசிபுரம் முன்னாள் எம்எல்ஏ

ராசிபுரம் அருகேயுள்ள டி.பச்சுடையாம்பாளையம் ஊராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர் பி.ஆர்.சுந்தரம். 1972 ஆம் ஆண்டு முதல் அதிமுக உறுப்பினரான இவர், நாமகிரிப்பேட்டை கூட்டுறவு நிலவள வங்கியின் இயக்குனர், பச்சுடையாம் பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், நாமகிரிப்பேட்டை ஒன்றிய அதிமுக செயலாளராகவும், நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளராக 1997 முதல் 2000 வரையும் பதவியில் இருந்தார்.

மேலும் ராசிபுரம் தொகுதியின் 1996, 2001ல் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். 1996-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்த நிலையிலும், தமிழகத்தில் அதிமுக சார்பில் வென்ற நான்கு பேரில் பி.ஆர்.சுந்தரமும் ஒருவர். மேலும், ராசிபுரம் தொகுதியில் 2006-ல் சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தவர். இதனைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நாமக்கல் தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு வென்று மக்களவைத் தொகுதி உறுப்பினராக பணியாற்றியவர்.

தொடர்ந்து ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் அதிமுகவில் ஓ.பி.எஸ்., போர்க்கொடி தூக்கியபோது அவரது அணியில் இணைந்து செயல்பட்டு அவர், தற்போது நாமக்கல் மாவட்ட அதிமுக அவைத் தலைவராக இருந்து வருகிறார். 2021 ஆம் ஆண்டு நாமக்கல், திருச்செங்கோடு தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு கேட்டு இவருக்கு மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் முன்னிலையில் பி.ஆர்.சுந்தரம் திமுகவில் இணைந்துள்ளார்.

 

Tags :

Share via