மணக்கோலத்தில் சிலம்பம் சுற்றிய  இளம்பெண்ணுக்கு கனிமொழி எம்பி வாழ்த்து

by Editor / 13-07-2021 07:37:18pm
மணக்கோலத்தில் சிலம்பம் சுற்றிய  இளம்பெண்ணுக்கு கனிமொழி எம்பி வாழ்த்து

 

தூத்துக்குடி மாவட்டம் நடுக்கூடுடன்காடு கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகள் நிஷா. பி.காம். பட்டதாரியான இவருக்கும், தேமாங்குளத்தை சேர்ந்த ராஜகுமாருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. பின்னர் திருமண ஊர்வலம் நடந்தபோது மணப்பெண் நிஷா பாரம்பரிய கலைகளான சுருள் வாள் வீச்சு, சிலம்பம் ஆகியவற்றை ஆடி அசத்தினார். அவர் தனது இரு கைகளிலும் சிலம்பத்தை பிடித்து லாவகமாக சுழற்றியபோது, அங்கு கூடியிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். சுருள்வாள் வீசியபோது அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். திருமணக்கோலத்தில் மணப்பெண் செய்த இந்த சாகசங்கள் அனைத்தும் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

இதுகுறித்து மணப்பெண் நிஷா கூறுகையில், ‘எனக்கு சிறு வயதிலேயே சிலம்பம் கற்க வேண்டும் என்பதில் ஆர்வம் இருந்தது. எனது தாயார் மணியும், பெண்கள் பாதுகாப்புக்கு தற்காப்பு கலைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஊக்கம் அளித்தார். அதனால் நான் சிலம்பம், ஒயிலாட்டம், சுருள்வாள், களரி ஆகிய கலைகளை கற்றுள்ளேன். இந்த பாரம்பரிய கலைப்போட்டிகளில் நான் பல்வேறு பரிசுகளும் பெற்று உள்ளேன். திருமண விழாவில் நான் கற்ற நமது மதிப்புமிக்க கலைகளை ஆடியது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார். இந்நிலையில், தனது திருமணம் முடிந்தவுடன் மணக்கோலத்தில் சிலம்பக்கலையை நிகழ்த்திய நிஷா கனிமொழி எம்பியை சந்தித்தார். அவருக்கு கனிமொழி எம்பி  தனது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்

 

Tags :

Share via