டாஸ்மாக் மது விற்பனையில் வரி ஏய்ப்பு குறித்து சிபிஐ விசாரிக்கவும்

by Staff / 16-05-2023 04:27:46pm
டாஸ்மாக் மது விற்பனையில் வரி ஏய்ப்பு குறித்து சிபிஐ விசாரிக்கவும்

டாஸ்மாக் மது விற்பனையில் கலால் வரி மற்றும் விற்பனை வரி ஏய்ப்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் சில்லறை கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் மதுப்புட்டிகளில் பெரும்பாலானவற்றுக்கு கலால் வரி மற்றும் விற்பனை வரி செலுத்தப்படாமல் ஏய்க்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. மக்களின் உயிர் போனாலும் பரவாயில்லை; அரசுக்கு வருவாய் வேண்டும் என்ற நோக்கத்துடன் நடத்தப்படும் மது வணிகத்தில் வரி ஏய்ப்பு செய்து அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் தனிநபர்களுக்கு திருப்பி விடப்படுவதை மன்னிக்க முடியாது.

தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில் நச்சு சாராயம் குடித்து 14 பேரும், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் பேருக்கரணை கிராமத்தில் நச்சு சாராயம் குடித்து ஐவரும் உயிரிழந்தது மதுவால் ஏற்படும் சீரழிவுகள் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.சட்ட விரோதமாக கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்படுவது ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் சந்து கடைகள் என்ற பெயரில், ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கு கீழும் 5 முதல் 10 சட்டவிரோத மதுக்கடைகள் இயங்குகின்றன. அங்கு 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுவதாகவும், அவ்வாறு விற்கப்படும் மதுப்புட்டிகள் எதற்கும் கலால் வரியோ, மதிப்புக் கூட்டு வரியோ செலுத்தப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களே இந்த வரி ஏய்ப்பை உறுதி செய்கின்றனர்.

தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுப் புட்டிகளில் மூன்றில் ஒரு பங்குக்கு மட்டும்தான் முறைப்படி கலால் வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரி செலுத்தப்படுவதாகவும், மீதமுள்ள இரு பங்கு மதுப் புட்டிகள் எந்த வரியும் செலுத்தப்படாமல் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாகவும் கூறப்படும் புகார்களை நம்பாமல் இருக்க முடியவில்லை. இக்குற்றச்சாட்டை நிதியமைச்சராக பணியாற்றிய பழனிவேல் தியாகராஜனும் உறுதி செய்திருக்கிறார். கடந்த ஆண்டு மார்ச் 15-ஆம் நாள் ஆங்கில நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் கலால் வரி ஏய்ப்பு பற்றி அவர் கூறிய தகவல்கள் முக்கியமானவை.

''தமிழகத்தில் ஆயத்தீர்வை வளையத்திற்கு வெளியே விற்பனை செய்யப்படும் மதுவின் அளவு மிகவும் அதிகம். அதிகபட்சமாக 50% அளவுக்கு இது இருக்கலாம். சிறந்த தொழில் நுட்பங்கள் மற்றும் கண்காணிப்பை பயன்படுத்தி இதைத் தடுப்பதற்கான வழிகளை நாம் கண்டறிய வேண்டும். மதுபாட்டில்கள் மீது ஹோலோகிராம் முத்திரை ஒட்டும் இப்போதைய முறை பயனற்றது. டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்கும் கருவிகள் இன்னும் முழுமையாக ஏற்படுத்தப் படவில்லை. மது விற்பனை அமைப்பு அடிப்படையாக மேம்படுத்தப்படவேண்டும்'' என்று பி. டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறி இருந்தார். அதற்குப் பிறகும் கலால் வரி ஏய்ப்பைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 

 

Tags :

Share via