2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாபஸ் - அண்ணாமலை கருத்து

by Staff / 21-05-2023 04:47:16pm
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாபஸ் - அண்ணாமலை கருத்து

ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் வாபஸ் என்பது, நம் நாட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்ல பிரதமர் மேற்கொண்ட நல்ல முயற்சி என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 6. 70 லட்சம் கோடியாக இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் மதிப்பு, தற்போது ரூ. 3. 60 லட்சம் கோடியாக மாறியுள்ளது. 2 ஆயிரம் ரூபாய் புழக்கம் என்பது, தற்போது மிகக் குறைவாக இருக்கிறது. தற்போது முற்றிலுமாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து அகற்ற ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது. இது பண மதிப்பு இழப்பு கிடையாது. நமது பண பரிவர்த்தனையை, டிஜிட்டல் பரிவர்த்தனையாக மாற்ற வேண்டும். உலகில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதன்மூலம், நாட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்ல பிரதமர் முயற்சித்து வருகிறார். தேர்தலின்போது மூட்டை மூட்டையாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைக் கொடுப்பதுதான் திமுகவின் ஸ்டைல். 2024 தேர்தலுக்காக மூட்டை மூட்டையாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கட்டி வைத்திருக்கிறார்கள். எனவேதான் முதல்வர் கோபப்படுகிறார். கர்நாடகாவில் முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் டி. கே. சிவக்குமாரும் முதல்வராக இருப்பார்கள் என கூறியுள்ளனர். கர்நாடகாவில் ஆரம்பமே குழப்பமாகத்தான் இருக்கிறது. சென்னை மெட்ரோ பணியில் நடந்த ஊழல் தொடர்பான ஆதாரங்களை சிபிஐயிடம் வழங்கியுள்ளோம். சிபிஐ நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார். மத்திய நிதியமைச்சருக்கு கடிதம்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘‘ஊழல் மற்றும் பண மோசடி செய்வதற்கான புதிய வழிகளை கண்டுபிடிப்பதில் திமுகவினர் பெயர் போனவர்கள். தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினின் மகனும், மருமகனும் ஓராண்டில் சுமார் ரூ. 30 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளதாக தமிழக அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதனால், திமுகவினர் தாங்கள் முறைகேடாக சம்பாதித்துள்ள 2 ஆயிரம் நோட்டுகளை டாஸ்மாக், கூட்டுறவு வங்கிகளின் மூலம் மாற்றும் முயற்சியில் ஈடுபடுவார்கள். எனவே, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வங்கிகளுக்கு நிதி அமைச்சகம் அறிவுறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

 

 

Tags :

Share via