நாங்குநேரி: நகைக்காக மாமியாரை  கொலை செய்த மருமகன் கைது 

by Editor / 24-07-2021 07:38:23pm
நாங்குநேரி: நகைக்காக மாமியாரை  கொலை செய்த மருமகன் கைது 

 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஜெகநாதபுரத்தைச் சேர்ந்தவர் வடிவு. 65 வயது மூதாட்டியான அவருடைய கணவர் பேச்சி ஏற்கெனவே இறந்துவிட்டார். வடிவுக்கு திருமலை நம்பி, என்ற மகனும் பரமேஸ்வரி, வேலம்மாள் என்ற மகள்களும் உள்ளனர்.மகன், மகள்களுக்கு திருமணமாகி தனிக்குடித்தனம் நடத்தி வருவதால் வடிவு மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.

அவரது வீட்டுக்கு அடுத்த தெருவில் மகன் திருமலை நம்பியும், மகள் வேலம்மாளும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
வடிவு கடந்த 12-ம் தேதி மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் வீட்டில் இறந்து கிடந்துள்ளார். அவருக்கு ஏற்கெனவே உடல்நலக் குறைவு இருந்ததால் நோய் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இறந்திருக்கலாம் என உறவினர்கள் கருதினார்கள்.அதனால் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு குடும்ப வழக்கப்படி இறுதிச் சடங்குகள் செய்து அவரது உடலை எரித்துள்ளனர். வடிவு இறந்த ஓரிரு நாள்கள் ஆகிவிட்டதால் அவர் அணிந்திருந்த நகைகளை உறவினர்கள் சரிபார்த்துள்ளனர்.


வடிவு அணிந்திருந்த கம்மல், செயின் உள்ளிட்டவை மாயமாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அணிந்திருந்த 13 சவரன் நகைகள் மாயமாகி இருந்தது தெரியவந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தார்கள். வீட்டுக்குள் எங்காவது இருக்குமா எனத் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.


அதனால் வடிவு இறப்பதற்கு முன்பு இரவு நேரத்தில் வீட்டுக்கு யாராவது வந்தார்களா என அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் குடும்பத்தினர் விசாரித்தனர். அப்போது, இரவு நேரத்தில், பாளையங்கோட்டை அருகே உள்ள நடுவக்குறிச்சியில் வசிக்கும் மகள் பரமேஸ்வரியின் கணவரான கல்லத்தியான் என்பவர் சிலருடன் வந்து சென்ற தகவல் கிடைத்தது.


கல்லத்தியான் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால் மாயமான நகைகள் குறித்து குடும்பத்தினர் அவரிடம் விசாரித்துள்ளனர். அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததுடன், அனைவரையும் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். அதனால் உறவினர்கள் இது குறித்து மூலைக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இன்ஸ்பெக்டர் காளியப்பன் தலைமையிலான போலீஸார் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். பின்னர், கல்லத்தியானிடம் விசாரித்தனர். அவர் பேச்சில் இருந்த முரண்பாடுகளைத் தொடர்ந்து போலீஸார், வழக்கமான பாணியில் விசாரித்தபோது நகைக்காக நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மூதாட்டி வடிவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.


குடிப்பதற்கு பணம் இல்லாததால் நண்பர்களுடன் வடிவை கொன்று கொள்ளையடிக்கத் திட்டமிட்டதாகவும் அதன்படி சென்று அவரது முகத்தில் தலையணையை வைத்து அழுத்திக் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.


பின்னர், அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் வீட்டில் இருந்த 13 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த கொலையில் அவருக்கு உடந்தையாக இருந்த நடுவக்குறிச்சியைச் சேர்ந்த இசக்கிராஜா(26) கீழநத்தம் மூர்த்தி(29) அந்தோணி (32) ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். 

 

Tags :

Share via