தவறான தகவலை வெளியிடும் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

by Editor / 18-07-2021 08:07:00pm
தவறான தகவலை வெளியிடும் எடப்பாடி பழனிசாமி  - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா பெருந்தொற்றின் போது, சென்னை மீனம்பாக்கம் அருகே தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்த கோவிட் கேர் மையத்தில் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட 85 முன்களப் பணியாளர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நினைவு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, "எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தடுப்பூசிகள் வந்த எண்ணிக்கை, பயன்படுத்திய தடுப்பூசிகள் எவ்வளவு என்பதை வெள்ளை அறிக்கையாக கேட்டு இருக்கிறார். புதிய அரசு பதவியேற்ற மே 7ஆம் தேதி முதல் தினந்தோறும், செய்திதாள், தொலைக்காட்சிகள் வாயிலாக வெளியிட்டு வருகிறோம். அதோடு வெள்ளை அறிக்கை வெளியிடுவது எங்களின் கடமையாகும்.

திமுக அரசு பதியேற்ற மே 7ஆம் தேதிக்கு பிறகு நாளொன்றுக்கு சராசரியாக 1 லட்சத்து 61 ஆயிரத்து 297 தடுப்பூசிகள் தமிழ்நாட்டில் செலுத்தப்பட்டுள்ளது. மே 7ஆம் தேதி முதல் இன்று வரை 70 நாட்களில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 1 கோடியே 12 லட்சத்து 90 ஆயிரத்து 767.

ஆனால் ஒன்றிய அரசுடன் இணக்கமாக இருந்த அதிமுக அரசு தடுப்பூசி செலுத்த தொடங்கிய ஜனவரி 14ஆம் தேதி முதல் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாத காலகட்டத்தில், 103 நாட்களுக்குள் வெறும் 63 லட்சத்து 28 ஆயிரத்து 207 தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியின் தினசரி சராசரி தடுப்பூசிகளின் எண்ணிக்கை என்பது வெறும் 61 ஆயிரத்து 441 மட்டுமே. அதிமுக அரசு மக்களிடம் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் விழிப்புணர்வை ஏற்படுத்த தவறிவிட்டது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டு மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க தவறிவிட்டார். இதுவரை தமிழ்நாட்டில் 1 கோடியே 76 லட்சத்து 19 ஆயிரத்து 174 தடுப்பூசி மொத்தமாக செலுத்தப்பட்டு இருக்கிறது. இதில் 32 லட்சத்து 67 ஆயிரத்து 631 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தின் போது, தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு அளிக்காமல் அதிகளவில் வீணாக்கப்பட்டது.

அதிமுக ஆட்சியில் வீணாக்கப்பட்ட தடுப்பூசிகள் எண்ணிக்கை 4,34,838. இது மொத்தமாக ஒதுக்கப்பட்ட ஊசிகளில் 6% ஆகும். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பாட்டில் மருந்தை 11 அல்லது 12 பேருக்கு செலுத்துவதன் மூலம் ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகளை விட கூடுதலாக 7 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இது முந்தைய ஆட்சியில் வீணாக்கப்பட்ட தடுப்பூசியின் எண்ணிக்கையை சமன் செய்த பிறகு போடப்பட்ட எண்ணிக்கை ஆகும்.

இந்தியாவிலேயே தடுப்பூசிகளை ஒதுக்கப்பட்ட டோஸ்களை விட கூடுதலாக மக்களுக்கு செலுத்தி சாதனை படைத்த மாநிலம் தமிழ்நாடு. இதை நேற்றைய தினம் பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் ஒப்புக்கொண்டு தமிழ்நாட்டுக்கு பாராட்டினர். இது பற்றி தெரியாமல் பாஜகவின் குஷ்புவும், அதிமுகவினரும் 5 லட்சம் தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டதாக பொய் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

குன்னூர், செங்கல்பட்டு தடுப்பூசி மையங்கள் செயல்பாட்டில் இருந்த காலத்திலேயே தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முந்தைய அதிமுக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. குன்னூர் மருந்தாலையில் ஆண்டுக்கு 1 கோடி ஊசிகள் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் பாஜக அரசுடன் நெருக்கமாக இருந்த அதிமுக தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

பேரிடர் காலத்தில் அரசியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்க வேண்டாம் என முதலமைச்சர் கூறி இருக்கும் நிலையில், அதிமுக முன் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு அரசியல் ரீதியாக பதிலளிக்க கடமைப்பட்டுள்ளோம். இதையும் மீறி தேவைப்பட்டால், சட்டமன்ற கூட்டத்தொடரில் வெள்ளை பேப்பரில் விவரங்களை எழுதி தர அரசு தயாராக உள்ளது என மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

 

Tags :

Share via