ஆட்டுத்தோலைப் போர்த்தி வரும் கள்ள தீர்க்கதரிசிகளில் நான் ஒருவன் இல்லை-தமிழருவி மணியன்

by Editor / 27-07-2023 10:14:02pm
ஆட்டுத்தோலைப் போர்த்தி வரும் கள்ள தீர்க்கதரிசிகளில் நான் ஒருவன் இல்லை-தமிழருவி மணியன்

காமராஜர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் தமிழருவி மணியன் அறிக்கை

கள்ளத் தீர்க்கதரிசியல்ல நான்! 

காமராஜர் மக்கள் கட்சி, பாரதப் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்றும்,  அண்ணாமலை நடத்தும் நடைப்பயணம் மாற்று அரசியலுக்கு அடித்தளம் அமைக்க வேண்டும் என்றும் தன் விருப்பத்தை வெளிப்படுத்தியதும் செய்யக் கூடாத பாவத்தைச் செய்து விட்டது போல் சிலர் சேற்றை வாரித் தூற்றும் செயலில் ஏன் ஈடுபடுகின்றனர் என்று புரியவில்லை

இந்தப் போலி காந்தியப் பற்றாளர்களும், காமராஜரை அரசியல் ஆதாயத்திற்காகப் புகழ்பவர்களும் தமிழகம் இதுவரை கண்டிராத மிக மோசமான ஊழல் ஆட்சியைத் தாங்கிப் பிடிப்பவர்கள் என்பதை நல்லோர் அறிவர். நாட்டு நலனுக்காக 'இந்தியா' கூட்டணியை உருவாக்கிய நடிப்புச் சுதேசிகள் குறிப்பிட்ட ஒருவரைப் பிரதமர் வேட்பாளர் என்று ஏன் கூற முடியவில்லை? இவர்களிடம் நாட்டை ஒப்படைத்தால் நான்கு மாதங்களில் ஆளுக்கொரு பக்கம் நின்று ஆட்சியைக் கவிழ்ப்பார்கள்.

1977 முதல் 28  மாதங்கள் நடந்தேறிய அவலக் காட்சிகள் மீண்டும் அரங்கேறுவதைத் தடுப்பதற்காகவே மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்கிறது காமராஜர் மக்கள் கட்சி. அன்றாடம் ஊழலுக்கு உற்சவம் நடத்தும் திராவிட மாடல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே,  அண்ணாமலையின் நடைப்பயணத்திற்கு வரவேற்பு இராகம் வாசிக்கிறது காமராஜர் மக்கள் கட்சி.


கடந்த 55 ஆண்டுகளாகத் திராவிட கட்சிகளுக்கு எதிராகச் செயற்பட்டு எதையும் எதிர்பாராமல் என் வாழ்வையே வேள்வியாக்கி என் இளமை முழுவதையும் முற்றாக அர்ப்பணித்த என் பின்னால் எத்தனை பேர் வந்து நின்றீர்கள்? ஒவ்வொரு தேர்தலிலும் வெட்கமின்றி மாறி, மாறி இரண்டு திராவிடக் கட்சிகளுக்குப் பல்லக்கு தூக்கியவர்கள் சகல வசதிகளோடும் சமூகத்தின் பார்வையில் வெற்றி உலா வரும் நிலையில் உண்மையும், நேர்மையும், எளிமையும், ஏழ்மையுமாய் சாதாரணர்களில் ஒரு சாதாரணனாகப் பொது வாழ்வில் இயங்கும் என் கரத்தை வலுப்படுத்த உங்களில் எத்தனை பேர் முன் வந்தீர்கள்?

சகல விதங்களிலும் சோரம் போன அருவருப்பான மனிதர்கள் புனிதராகப் பொய் வேடமிட்டு என்னை ஏசுவது குறித்து நான் கவலைப்படவில்லை. 

 

தமிழ்ச் சமூகத்தின் அனைத்துப் பாரம்பரியப் பெருமைகளையும் அன்று முதல் இன்றுவரை ஆழக் குழி தோண்டிப் புதைத்துவிட்ட திமுக இருக்கும் கூட்டணிக்கு எதிரணியில் நிற்பதுதான் என் அரசியல் சுதர்மம். கால மாற்றத்திற்கேற்பக் கோலம் மாறும் அரசியல் களத்தில் ஒரே இடத்தில் நிற்கும் கழுதையாக இல்லாமல்  அடிப்படை இலட்சியத்திற்காக அவ்வப்பொழுது வியூகங்களை மாற்றுவதுதான் விவேகம். 

 

இந்திய அரசியல் வரலாற்றில் சூழலுக்கு ஏற்ப முரண்பட்ட மகத்தான மனிதர்களை நான் அறிவேன். என் நேர்மையும், தூய்மையும், எளிய வாழ்க்கையும் உங்கள் கண்களுக்குப் புலப்படாவிடில் அது குறித்து நான் ஏன் கவலைப்பட வேண்டும்? ஊருக்கெல்லாம் பறையறிந்து என் நிலையை விளக்க வேண்டிய அவசியமில்லை. ஊழலற்ற நிர்வாகம், மதுவற்ற மாநிலம் என்ற இரண்டு இலட்சியப் பதாகைகளோடு கடுந் தவமியற்றிய என் பின்னால் அணிவகுக்காத இந்தத் தமிழ் மக்கள் வெட்கித் தலை குனிய வேண்டும்.

கர்த்தர் சொன்னபடி ஆட்டுத்தோலைப் போர்த்தி வரும் கள்ள தீர்க்கதரிசிகளில் நான் ஒருவன் இல்லை. இதை அறிந்தவர் அறிவாராக.

 

Tags : தமிழருவி மணியன்

Share via