முன்னாள் எம்எல்ஏ தாக்கியதால் காற்றாலை இன்ஜினியர் அரசு மருத்துவமனையில் அனுமதி -

by Admin / 05-09-2023 12:05:13pm
 முன்னாள் எம்எல்ஏ தாக்கியதால் காற்றாலை இன்ஜினியர் அரசு மருத்துவமனையில் அனுமதி -

ஓட்டப்பிடாரத்தில் முன்னாள் எம்எல்ஏ தாக்கியதால் காயமடைந்த தனியார் காற்றாலை இன்ஜினியர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி - தனியார் காற்றாலை நிறுவனத்தினர் தாக்கியதால் காயமடைந்தாக முன்னாள் எம்எல்ஏ ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் அனுமதி பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவில் பல்வேறு பகுதிகளில் செம் கார்ப் என்ற தனியார் நிறுவனமானது காற்றாலைகளை அமைத்து வருகிறது.இவ்வாறு அமைக்கப்படும் காற்றாலைகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் காற்றாலைகள் அமைக்க உதிரி பாகங்கள் கொண்டு செல்லும் கனரக வாகனங்கள் மூலம் பொதுப் பாதைகள் சேதமடைவதாகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் தங்களது குற்றச்சாட்டுகளை மனுக்களாக அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் செம் கார்ப் நிறுவனமானது கடந்த 3 நாட்களாக ஓட்டப்பிடாரம் பகுதியில் ஒரு இடத்தில் காற்றாலை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளை கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த பாஸ்கரன் என்பவரது மகன் அறிவிற்கோ (28) என்பவர் பணியாற்றி அப்பணிகளை கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அவ்வாறு பணிகள் நேற்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜ் (தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் உள்ளார்) அங்கு பணியில் இருந்த அறிவிற்கோவிடம் தகராறு செய்து அவரை முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜ் உள்ளிட்ட அவருடன் வந்த 7 பேர் தாக்கியதால் காயம் அடைந்த அறிவிற்கோ சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காயம் அடைந்த அறிவிற்கோ செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த மூன்று நாட்களாக பணிகள் நடைபெற்ற வந்த நிலையில், இன்று அப்பகுதிக்கு வந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜ் எனது இடத்தில் ஏன் வேலை செய்கிறீர்கள் எனக் கூறிதகராறு செய்து அவர் உட்பட அவருடன் வந்த ஏழு பேர் தன்னை கடுமையாக தாக்கியதாக அவர் குற்றம் சாட்டினார். தற்போது பணிகள் நடைபெற்று வரும் இடம் தாங்கள் முழு அனுமதி பெற்ற பிறகு தான் அப்பணிகள் நடைபெற்று வருவதாக கூறியும் அதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு பணிக்காக வைத்திருந்த பைப்புகள் மற்றும் காங்கிரீட்டுகளை முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜ் மற்றும் அவருடன் வந்தவர்கள் உடைத்து சேதப்படுத்தினார்கள் என்றும் இதன் மதிப்பு சுமார் 10 லட்சம் இருக்கும் என்றார்.

பின்னர் இது குறித்து ஓட்டப்பிடாரத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜ் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், தனது இடத்தில் என்னுடைய அனுமதி இல்லாமல் காற்றாலை நிறுவனத்தினர் பணிகளை மேற்கொண்டதால் இதுகுறித்து தான் சுட்டிக் காட்டியதற்கு தனியார் காற்றாலை நிறுவனத்தைச் சார்ந்த இரண்டு பேர் தன்னை கடுமையாக தாக்கியதால் தானும் தன்னுடன் வந்த மற்றவரும் அங்கிருந்து ஓடி வந்து விட்டதாக அவர் தெரிவித்தார். என் மீது தாக்குதல் தொடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் தங்களை தாக்கியதாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இதுகுறித்து இரு தரப்பினரும் ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் இது குறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 முன்னாள் எம்எல்ஏ தாக்கியதால் காற்றாலை இன்ஜினியர் அரசு மருத்துவமனையில் அனுமதி -
 

Tags :

Share via