சனாதனத்தை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை-பிரேமலதாவிஜயகாந்த்

by Staff / 10-09-2023 04:42:26pm
சனாதனத்தை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை-பிரேமலதாவிஜயகாந்த்

சென்னை வானகரத்தில் உள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். துணை செயலாளர் பார்த்த சாரதி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது: சுங்கவரி, சாலை வரி என பல்வேறு வரிகளை வசூலிக்கின்றனர். ஆனால்சாலைகள் குண்டும் குழியுமாகத்தான் இருக்கிறது. தமிழகத்தில் தற்போதும்கூட காலாவதியான சுங்கச்சாவடிகள் இயங்கி கொண்டுதான் இருக்கின்றன. இவற்றை முதலில் மூட வேண்டும். சுங்க கட்டண உயர்வை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து விஜயகாந்த் விரைவில் அறிவிப்பார். இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்றுவது ஒரு குழந்தைக்கு பெயர் வைப்பது போன்று எளிதல்ல. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு காலம் முடிந்த நிலையில், தற்போது பெயரை மாற்றினால் அதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல ஒரு கூட்டணியின் பெயரை ஒரு நாட்டின் பெயராக வைப்பதும் தவறுதான். திமுக அரசு ஊழல், லஞ்சம், மதுக்கடைகளை ஒழித்து, மக்களுக்கு தேவையான திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமே தவிர, சனாதனத்தை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. தற்போது இருக்கும் அரசியல் ஆட்சியாளர்கள், அடுத்த தேர்தலுக்காகத்தான் வேலைசெய்கிறார்களே தவிர அடுத்த தலைமுறைக்கு வேலை செய்வதில்லை என கூறினார்.

 

Tags :

Share via