சாதிவாரி கணக்கெடுப்பை விரைவாக நடத்த அரசு முன்வர வேண்டும் ராமதாஸ்

by Staff / 19-10-2023 02:10:13pm
சாதிவாரி கணக்கெடுப்பை விரைவாக நடத்த அரசு முன்வர வேண்டும் ராமதாஸ்

சாதிவாரி கணக்கெடுப்பை விரைவாக நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு இதுவரை முன்வரவில்லை என்ற போதிலும், சமூகநீதியில் அக்கறை கொண்ட மாநிலங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி வருகின்றன. ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்கள் விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்போவதாக அறிவித்துள்ளன. ஆக்கப்பூர்வமான வகையில் மாறிவரும் சமூகநீதிச் சூழலில், எந்த ஒரு மாநிலமும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் இருக்க முடியாது என்பது உறுதியாகி விட்டது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதில் தமிழக அரசு இரட்டை நிலைப்பாட்டையே எடுத்து வருகிறது. தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தேசிய அரங்குகளில் வலியுறுத்தி வரும் திமுக அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர மறுக்கிறது. சமூகநீதி மண் என்று போற்றப்படும் தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாவிட்டால், சமூக, பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் பின் தங்கி விடும். எனவே, தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை விரைவாக நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும். அதற்கான கால அட்டவணையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via