புதிதாக ரூபாய் நோட்டுகளைஅச்சடிக்கும் திட்டம் இல்லை: மத்திய நிதி அமைச்சர்

by Editor / 27-07-2021 05:30:57pm
 புதிதாக ரூபாய் நோட்டுகளைஅச்சடிக்கும் திட்டம் இல்லை: மத்திய நிதி அமைச்சர்


கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க புதிதாக ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிட்டு வெளியிடும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


இப்போதைய நெருக்கடியான நிலையில் வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்கவும், பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் அரசு கரன்சி நோட்டுகளைக் கூடுதலாக அச்சிட்டு புழக்கத்தில் விட வேண்டும் என்று பல்வேறு பொருளாதார நிபுணர்களும், வல்லுநர்களும் கூறி வருகின்றனர்.


இது தொடர்பான கேள்விக்கு மக்களவையில் எழுத்துமூலம் நேற்று அளித்த பதிலில் நிர்மலா சீதாராமன் மேலும் கூறியிருப்பதாவது:


நாட்டின் பொருளாதார அடிப்படை ஸ்திரமாக உள்ளது. ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார சுணக்க நிலையில் இருந்து மெதுவாக மீண்டு வருகிறோம். ‘சுயசார்பு இந்தியா’ திட்டத்தின்கீழ் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் மீண்டெழுந்து வளர்ச்சிப் பாதையில் செல்லத் தொடங்கிவிட்டது. நடப்பு நிதி ஆண்டான 2021 22ல் நாட்டின் பொருளாதாரம் 14.4 சதவீத வளர்ச்சி காணும்.


சுயசார்பு இந்தியா திட்டத்தின்கீழ் அரசு ரூ.29.87 லட்சம் கோடிக்கு சிறப்பு பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் ஒருங்கிணைந்த நிதி திட்டங்களை அறிவித்துள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்பும் அதிகரித்து வருகிறது. இது தவிர பட்ஜெட் அறிவிப்புகள் மூலம் அரசின் மூலதனச் செலவுகள் 34.5 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via