சித்தூர் அருகே கொரோனா நோயாளி ஆஸ்பத்திரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை

by Admin / 29-07-2021 02:05:16pm
சித்தூர் அருகே கொரோனா நோயாளி ஆஸ்பத்திரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை


   
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே கொரோனா குணமாகாததால் மனம் உடைந்து காணப்பட்டவர் ஆஸ்பத்திரியின் 2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சந்திரகிரி மண்டலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணய்யா (வயது 50). சுகாதாரத்துறை ஊழியர். இவர் கொரோனா தொற்று பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.

 இவருக்கு கடந்த 24-ந் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து சிம்ஸ் ஆஸ்பத்திரி அருகில் உள்ள பத்மாவதி கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

கிருஷ்ணய்யாவுக்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டர்களிடம் தான் கொரோனாவில் இறந்து விடுவேனோ என அடிக்கடி கேள்வி எழுப்பி வந்துள்ளார். அதற்கு டாக்டர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீட்டிற்கு செல்வீர்கள் என கூறினர்.

கொரோனா குணமாகாததால் மனம் உடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் கிருஷ்ணய்யா ஆஸ்பத்திரியின் 2-வது மாடியில் உள்ள அறையின் ஜன்னலை பெயர்த்து எடுத்து விட்டு அதன் வழியாக கீழே குதித்தார்.

இதில் உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அலிபிரி போலீசார் கிருஷ்ணய்யா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணய்யா பயத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா ? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via