மூலப்பொருட்கள் விலை உயர்வால் பாத்திர தயாரிப்பில் ஈடுபட திருப்பூர் உற்பத்தியாளர்கள் தயக்கம்

by Admin / 03-08-2021 02:30:31pm
மூலப்பொருட்கள் விலை உயர்வால் பாத்திர தயாரிப்பில் ஈடுபட திருப்பூர் உற்பத்தியாளர்கள் தயக்கம்


   
எவர்சில்வர் தகடு கிலோவுக்கு ரூ.35-ம், பித்தளை தகடு ரூ.100-ம் விலை உயர்ந்துள்ளது. செம்பு தகடு ரூ.625ல் இருந்து தற்போது ஆயிரம் ரூபாயாக விலை உயர்ந்துள்ளது

திருப்பூர் அனுப்பர்பாளையம், வேலம்பாளையம், செட்டிபாளையம், அங்கேரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 250-க்கும் மேற்பட்ட பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன. இங்கு எவர்சில்வர், பித்தளை, செம்பு ஆகிய உலோகங்களில் பாத்திரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

அவை தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. இந்தநிலையில் திருமண சீசனையொட்டி போதிய ஆர்டர்கள் இருந்தபோதும் பாத்திர உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் உற்பத்தியில் ஈடுபட உற்பத்தியாளர் தயங்குகின்றனர்.
 
உற்பத்திக்கு தேவையான கார்பைடு கல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. 100 கிலோ கொண்ட ஒரு டின் கார்பைடு கல் ரூ. 8 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக விலை உயர்ந்துள்ளது.

எவர் சில்வர் தகடு கிலோவுக்கு ரூ.35 -ம், பித்தளை தகடு ரூ.100ம் விலை உயர்ந்துள்ளது. செம்பு தகடு ரூ.625ல் இருந்து தற்போது ஆயிரம் ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. இது குறித்து உற்பத்தியாளர்கள் கூறுகையில், மூலப்பொருட்கள் விலை நிலையாக இல்லை.

உற்பத்தியில் ஈடுபடும் போது அதன் விலை அதிகரிக்கிறது. இதனால் விற்பனை பாதிக்கிறது, ஆர்டர் எடுக்கவும் அச்சமாக உள்ளது. பலர் உற்பத்தியை குறைத்து வருகின்றனர். அரசு இதில் தலையிட்டு மூல பொருட்களின் விலையை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

 

Tags :

Share via