ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது.

by Editor / 22-03-2024 09:36:57pm
ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், கடம்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மதன் (26). இவர், தனது நிலத்துக்கு கூட்டுப்பட்டாவில் இருந்து தனிப்பட்டா கேட்டு சேர்ந்தமங்கலம் கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்துள்ளார். அந்த விண்ணப்பம் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என நிராகரிக்கப்பட்டது. 
இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் மாடசாமியிடம் கேட்டபோது, மீண்டும் விண்ணப்பித்துவிட்டு, ஆவணங்களை நேரில் எடுத்து வரும்படி கிராம நிர்வாக அலுவலர் கூறியுள்ளார். அதன்படி, ஆவணங்களுடன் மதன் நேரில் சென்றபோது, கிராம நிர்வாக அலுவலர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். 
லஞ்சம் கொடுக்க விரும்பாத மதன், இது தொடர்பாக தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீஸாரின் அறிவுரைப்படி ரசாயன பவுடர் தடவிய 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் கிராம நிர்வாக அலுவலர் மாடசாமியிடம் மதன் கொடுத்துள்ளார். 
லஞ்ச பணத்தை கிராம நிர்வாக அலுவலர் மாடசாமி பெற்றுக்கொண்டது தெரியவந்ததும் அவரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி பால்சுதர், ஆய்வாளர் ஜெயஸ்ரீ மற்றும் போலீஸார் கைது செய்தனர்.

 

Tags : ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது.

Share via