கோடை வெப்பத்தை சமாளிக்க ரயில்களில் குடிநீர் வழங்க ஏற்பாடு

by Editor / 15-04-2024 08:48:39am
கோடை வெப்பத்தை சமாளிக்க ரயில்களில் குடிநீர் வழங்க ஏற்பாடு

கடும் கோடை வெயிலை சமாளிக்க மதுரை கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு குடிநீர் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் குடிநீர் வசதி செய்து தருவது ரயில் பயணிகள் வசதிகளில் ஒரு முக்கிய அம்சமாகும். கடும் கோடை வெப்பம் மற்றும் வெப்ப அலை வீச்சு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரயில் நிலையங்களில் உள்ள குடிநீர் வசதியை  ரயில்வே அமைச்சகம் மறு ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவில், கடும் கோடை வெயிலை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க மண்டல ரயில்வே நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ரயில் நிலையங்களில் குடிநீர் குழாய்கள் குளிர் குடிநீர் வசதி ஆகியவை சரியாக செயல்படுகிறதா என கண்காணிக்கவும், தேவைக்கேற்ப கூடுதலாக தண்ணீர் வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருக்கவும், தினந்தோறும் குடிநீர் வசதி பற்றி ஆய்வு செய்யவும், அரசு சாரா சேவை நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள், சாரண, சாரணியர் படை ஆகியவற்றை பயன்படுத்தி குறிப்பாக இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு குடிநீர் வழங்கவும், தண்ணீர் பற்றாக்குறை நிலவும் ரயில் நிலையங்களில் அருகில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாநில அரசு நிறுவனங்களின் உதவியுடன் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், குடிநீர் தேவை நிலவரம் குறித்து 24 மணி நேரமும் கண்காணிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி மண்டல ரயில்வேகளுக்கு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் உத்தரவையடுத்து, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி போன்ற முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் அனைத்து ரயில் நிலையங்களிலும் சாரண, சாரணியர் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் ரயில்களில் பயணம் செய்யும் ரயில் பயணிகளுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் பற்றாக்குறை நிலவும் மதுரை, கீழ் மதுரை, கூடல் நகர், பரமக்குடி, சத்திரக்குடி ஆகிய ரயில் நிலையங்களில்  கூடுதல் நீர்  இருப்பை உறுதி செய்ய தனியார் தண்ணீர் வழங்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது.  தண்ணீர் வழங்கும் குழாய் தொடர்களில் நீர்க்கசிவு, தண்ணீர் திறக்கும் வால்வுகளில் உள்ள குறைபாடுகள் ஆகியவை சரி செய்யப்பட்டுள்ளன. மேலும் தற்போதைய நீர் ஆதாரங்களான பழைய கிணறுகள் தூர்வாரப்பட்டு ள்ளன.  இந்த நடவடிக்கைகள் கடும் கோடை வெயிலை  சமாளிக்க ரயில் பயணங்களுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோடை வெப்பத்தை சமாளிக்க ரயில்களில் குடிநீர் வழங்க ஏற்பாடு
 

Tags : கோடை வெப்பத்தை சமாளிக்க ரயில்களில் குடிநீர் வழங்க ஏற்பாடு

Share via