16-ம் தேதி முதல் மருத்துவக் கல்லூரிகள் திறப்பு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

by Editor / 07-08-2021 09:10:39am
 16-ம் தேதி முதல் மருத்துவக் கல்லூரிகள் திறப்பு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் மருத்துவக் கல்லூரிகளும் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான, விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் கடுமையான கட்டுப்பாடுகளால் குறைந்திருந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்கிடையே தமிழ்நாட்டில் 9-ம் தேதி வரை ஊரடங்கு போடப்பட்டு இருந்தது.மக்கள் கூட்டமாக இருப்பதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

 மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் இறைச்சி, மீன் கடைகளை தனித்தனியாக பிரித்து விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக பணிகளை தொடங்கும்படி பள்ளி கல்வித்துறைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் மருத்துவக் கல்லூரிகளும் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், ஆகஸ்ட் 16-ம் தேதியிலிருந்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இது தொடர்பான, விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிடும்.

இம்மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மருத்துவப் பணியாளர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு ஏற்கெனவே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன'' என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளார்.

 

Tags :

Share via