திருச்செந்தூர், ராமேஸ்வரத்தில்  தரிசனத்திற்கு மட்டும் அனுமதி

by Editor / 09-08-2021 08:29:39pm
திருச்செந்தூர், ராமேஸ்வரத்தில்  தரிசனத்திற்கு மட்டும் அனுமதி

 

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 8 நாட்களுக்குப் பிறகு இன்று பக்தர்கள் மீண்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் கடலில் புனித நீராடவும், நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடவும் அனுமதி தடை நீடிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்தில் இன்று காலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் கடலில் புனித நீராட தடை நீடிக்கப்பட்டுள்ளது.


கொரொனா தடுப்பு நடவடிக்கையாக ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசையையொட்டி கோவில்களில் பக்தர்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு முக்கிய கோவில்களில் கடந்த 1ஆம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கடந்த 1 ஆம்தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதே நேரம் கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில் 8 நாட்களுக்குப் பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று பக்தர்கள் மீண்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளின்படி கடலில் புனித நீராடவும், நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்தில் இன்று காலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் கடலில் புனித நீராட தடை நீடிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் கோவிலில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 8வது நாளான நேற்று ஆடி அமாவாசையையொட்டி காலை 9 மணி அளவில் அம்பாள் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி 3ஆம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.


தொடர்ந்து பகல் 11 மணி அளவில் ராமபிரான், சீதை லட்சுமணர், சுக்ரீவர், ஆஞ்சநேயர் ஆகியோர் சிவதீர்த்தம் எதிரே உள்ள மண்டபத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து அங்கு ராமர் சிலையுடன் குருக்கள் ஒருவர் தீர்த்தத்தில் இறங்கி நீராடி தீர்த்தவாரி பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் ராமபிரானுக்கு சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன.


இன்று அதிகாலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் முககவசம் அணிந்து, கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்த பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கொரொனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு மேலும் வருகின்ற 11ஆம் தேதி ஆடி பூரம் தினத்தன்றும், வருகிற வெள்ளி சனி, ஞாயிறு ஆகிய தினங்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via