ஓலா நிறுவனம் அறிமுகப்படுத்திய  மின்சார ஸ்கூட்டர் 

by Editor / 15-08-2021 06:36:22pm
 ஓலா நிறுவனம் அறிமுகப்படுத்திய  மின்சார ஸ்கூட்டர் 


இந்தியாவின் 75 வது சுதந்திர தினமான இன்று ஓலா நிறுவனம் தனது மின்சார ஸ்கூட்டர் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ என இரண்டு வகையில் உள்ளது. தமிழ்நாட்டில் எஸ் 1 ஸ்கூட்டரின் விலை 99,999 ரூபாயாக உள்ளது. அதேபோல் எஸ் 1 ப்ரோ வகை ஸ்கூட்டரின் விலை 1,29,999 ரூபாய் ஆக உள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் 2021 ஜூலை 19-ஆம் தேதி வரை, நாட்டில் 5,17,322 மின்சார வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் மொத்த வாகனங்களில் 0.06 சதவீதம் மட்டுமே மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களாகும். சீனாவில், இந்த எண்ணிக்கை 2 சதவீதமாகவும், நார்வேயில் இந்த எண்ணிக்கை 39 சதவீதமாகவும் உள்ளன. நகர்ப்புறங்களில் போக்குவரத்து அடர்த்தி காரணமாக, பொதுவாக இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. எனவே, மின்சார வாகனங்களில், மற்ற வாகங்களைவிட இரு சக்கர வாகனங்கள் மிகப் பெரும் பங்கு வகிக்கின்றன.இந்தியாவில் 2030ம் ஆண்டில் தனியார் கார்கள் 30 சதவீதம், வர்த்தகப் பயன்பாட்டுக் கார்கள் 70 சதவீதம், பேருந்துகள் 40 சதவீதம், இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்கள் 80 சதவீதம் என்ற அளவில் விற்பனையை எட்டினால், 16 மில்லியன் டன் அளவுக்கு கார்பன்- டை- ஆக்ஸைடு கழிவை வெளியேற்றுவதைக் குறைக்கலாம். கச்சா எண்ணெய் இறக்குமதி குறைப்பின் மூலம் 1.1 லட்சம் கோடி ரூபாயை இந்தியா சேமிக்கலாம். மின்சார வாகனங்களுக்கான பேட்டரி, சார்ஜர் உற்பத்தியில் 1.2 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம் என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும், இரு சக்கர வாகனங்களில் விலையும் குறையும் என்று கணிக்கப்படுகிறது.

அரசுக்கு ஏற்படும் இழப்பு: பெட்ரோல், டீசல் விற்பனை குறைப்பால் மத்திய/மாநில அரசுகளுக்கு 1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்படுகிறது. பெட்ரோலியத் துறையிலும், ஐசிஇ (Internal Combustion Engine) வாகனங்கள் உற்பத்தியிலும் அதிகமான வேலைவாய்ப்பு இழப்புகளும் ஏற்படும். இருப்பினும், மின்சாரத் துறையிலும், மின்னூட்டு வசதி (பேட்டரி, சார்ஜர்) உர்பத்தியிலும் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும். இருப்பினும், மின்சார வாகனங்கள் உற்பத்திக்கு குறைந்தயளவிலான பணியாளர்கள் மட்டுமே தேவைப்படுவார்கள் என்று கருதப்படுகிறது.

காலநிலை மாற்றம்: இந்தியாவில் தொழில்நிறுவனங்களில் கரியமில வாயுவை (CO2) வெளியிடுவதில் போக்குவரத்து துறை இரண்டாவது இடத்தில் உள்ளது. அதிலும் 90 சதவீதம் கார்பன்-டை-ஆக்ஸைடு (CO2) கழிவு சாலைப் போக்குவரத்து வாகனங்களின் மூலம் வெளியேற்றப்படுகிறது.இருப்பினும், மின்சார வாகனங்களுக்கு மின்சாரம் தேவைப்படுகிறது. மின்சார வாகனங்கள் அதிகரிக்க, மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இந்தியாவில், சுமார் 70 சதவீத மின்சார உற்பத்தி, நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி நிலையங்களால் நடைபெற்று வருகிறது.

கார்பன்- டை- ஆக்ஸைடு கழிவை வெளியேற்றுவதில் மின் உற்பத்தி நிலையங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.ஃபேம் -2 திட்டத்தின் கீழ், இரு சக்கர மின்சார வாகனங்களுக்கான ஊக்கத் தொகை ரூ.10 ஆயிரத்திலிருந்து, ரூ.15 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பேட்டரி விலையை குறைக்க, நவீன பேட்டரி தயாரிப்புக்கு, உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

 

Tags :

Share via