அருள்மிகு வேதராஜன் திருக்கோயில், திருநகரி, மயிலாடுதுறை

by Editor / 15-08-2021 07:11:28pm
அருள்மிகு வேதராஜன் திருக்கோயில், திருநகரி, மயிலாடுதுறை

 

மங்களா சாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 34வது திருத்தலம். திருநகரி தலம் திருமங்கை ஆழ்வார் பிறந்த இடமாகும்.
இந்த கோயில் திருநாங்கூருக்கு அருகில், திருவாலியிலிருந்து 5கி.மீ. தொலைவில் உள்ளது. சீர்காழியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.


பெருமாளின் 108 திருப்பதிகளில் ஒன்று. மேற்கு பார்த்து வீற்றிருந்த திருக்கோலம் சிறப்பு வாய்ந்தது. பெருமாள் லட்சுமியை திருமணம் செய்து கொண்டு திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வரும்போது நீலன் மறித்து வழிப்பறி நடத்த, பெருமாள் நீலனின் காதில் அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து ஆட்கொண்டார்.இவ்வாறு திருவாலியின் வரலாற்றிற்கும், திருநகரியின் வரலாற்றிற்கும் ஒரே வரலாறு உள்ளது.திருமங்கையாழ்வார் இத்தலத்தில் தனி சன்னதியில் திருஞானசம்பந்தர் கொடுத்த வேலுடன் காட்சி தருகிறார்.இவருக்கு எதிரே ஒரு கொடிமரமும், பெருமாளுக்கு எதிரே ஒன்றும் என இரண்டு கொடி மரங்கள் உள்ளன.


இக்கோயிலின் இராஜகோபுரம் ஏழு நிலைகளைக் கொண்டது. கோயில் உற்சவரின் பெயர் கல்யாண ரங்கநாதர் ஆகும். இக்கோயில் வேதராஜன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.


திருச்சுற்றில் வலப்புறம் ஆண்டாள் சன்னதியும், இடப்புறம் தாயார் சன்னதியும் உள்ளது. திருச்சுற்றில் பின்புறம் யோக நரசிம்மப் பெருமாள் உள்ளார். திருமங்கை ஆழ்வார் அவதரித்த தலம்.


ஆழ்வார் பல அற்புதங்கள் செய்ததால் ஆழ்வார் கோயில் என்றும் அறியப்படுகிறது. பெருமாள் கல்யாண திருக்கோலத்தில் இளம் தம்பதிகளாக காட்சி அளித்தார். இதனால் கல்யாண ரெங்கநாதர் என்று பெயர் வந்தது.


வைகாசி சுவாதி 10 நாள் திருவிழா, ஆவணி பவித்ர உற்சவம், தை மாத 12 கருட சேவை, பங்குனி உத்திரம், மாத சுவாதி, பிரதோஷம் ஆகிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.ஞானம், செல்வம் வேண்டுவோர் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செய்கின்றனர்.

 

Tags :

Share via