தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 23ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை.

by Admin / 19-08-2021 03:20:50pm
தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 23ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில்,  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை.

 

தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? நாளை ஆலோசனை
தமிழகத்தில் கடந்த மே 7ம் தேதி புதிய அரசு பதவி ஏற்றபோது கொரோனா தொற்று பரவல் தொடர்ச்சியாக அதிகரித்தது. கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றிற்கு 36 ஆயிரத்தை கடந்தது. அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் மே 10ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது..இருப்பினும், கொரோனா தாக்கம் குறையாத நிலையில், முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி மே 24ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.


அதன் பின்னர் பொதுமக்களின் நலன் கருதி சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. ஆகஸ்ட் 23ம் தேதி வரை 11வது முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. ஆகஸ்ட் 23ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், 12வது முறையாக ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும்,சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 11மணிக்கு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

மேலும் தொற்று எண்ணிக்கை அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாகவும், மேலும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும், மாவட்டந்தோறும் தொற்று எண்ணிக்கை, சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை, 3ம் அலை வராமல் பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

 

Tags :

Share via