ஆப்கனை விட்டு உடனே  வெளியேறுங்கள்:  அமெரிக்க படைகளுக்கு தலிபான்கள் எச்சரிக்கை

by Editor / 24-08-2021 04:00:14pm
ஆப்கனை விட்டு உடனே  வெளியேறுங்கள்:  அமெரிக்க படைகளுக்கு தலிபான்கள் எச்சரிக்கை


ஆப்கானிஸ்தானில் இருந்து விரைவில் வெளியேறுங்கள்; இல்லாவிட்டால் மோசமான விளைவுகள் நேரிடும் என அமெரிக்கா, பிரிட்டன் படைகளுக்கு தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.


கடந்த 15 ந்தேதி ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதனையடுத்து அங்கு ஆட்சி அமைக்கும் முயற்சியில் அவர்கள் இறங்கியுள்ளனர். இதற்கிடையில், ஆப்கானிஸ்தானில் உள்ள தத்தம் நாட்டவரை மீட்கும் பணியில் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா எனப் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் படையினர் பெரும்பாலானோரை அமெரிக்கா திரும்பப்பெற்றுவிட்டது. காபூல் விமான நிலையத்தில் இருந்து இந்த மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் மக்களும் அகதிகளாக சொந்த நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்த மீட்புப்பணிக்காக காபூல் விமான நிலையத்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தானில் இருந்து ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் தங்கள் படையினர் முழுவதையும் திரும்பபெற்றுவிடுவோம் என அமெரிக்கா தலிபான்களிடம் ஒப்பந்தம் செய்துள்ளது.


இந்நிலையில், ஒப்பந்ததின்படி ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் எனவும், அவ்வாறு அமெரிக்கா தங்கள் படைகளை திரும்பபெறுவதில் தாமதம் ஏற்பட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தலிபான் பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.


இது தொடர்பாக தலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் கூறுகையில், அமெரிக்க, பிரிட்டன் படையினர் மீட்புப் பணிகள் பெயரில் இன்னும் கொஞ்சம் நாள் ஆப்கனில் இருக்க எடுக்கும் முயற்சியை நாங்கள் நீட்டிக்கப்படும் ஆக்கிரமிப்பாகவே கருதுகிறோம். சொன்னபடி திரும்பவில்லை என்றால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளார்.


ஆகஸ்ட் 31 ந்தேதிக்குள் அனைத்துப் படைகளும் வெளியேறிவிடும் என்று ஏற்கெனவே மேற்கத்திய நாடுகள் கூறியிருந்த நிலையில் தற்போது அதை மேலும் நீட்டிக்க ஜி 7 நாடுகளின் தலைவர்கள் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளை ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு பின்னரும் நிலை நிறுத்துவது குறித்த இறுதி முடிவை அதிபர் ஜோ பைடன் தான் எடுக்க வேண்டும் என அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via