வட சென்னையை தொடர்ந்து தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 50 ஆயிரம் டன் நிலக்கரி மாயம்?

by Admin / 25-08-2021 01:46:56pm
வட சென்னையை தொடர்ந்து தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 50 ஆயிரம் டன் நிலக்கரி மாயம்?

தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு ஒடிசா, மேற்குவங்கம் மாநிலங்களில் இருந்து நிலக்கரிகள் கப்பல்களில் எடுத்து வரப்பட்டு கன்வேயர் பெல்ட் வாயிலாக மின்நிலைய வளாகத்திற்கு அனுப்பப்படுகிறது.

திருவள்ளூரில் உள்ள வட சென்னை அனல்மின் நிலையத்தில் ரூ. 85 கோடி மதிப்பிலான 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயமாகி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதைத் தொடர்ந்து அந்த மின் நிலையத்தில் ஆய்வு செய்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நிலக்கரி இருப்பு குறைவை உறுதிப்படுத்தினார். மேலும் முறைகேட்டை கண்டறிய முழு விசாரணை நடத்தப்படும் எனவும் கூறினார்.

இந்நிலையில் தூத்துக்குடி அனல் மின்நியைத்திலும் நிலக்கரி மாயமாகி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தூத்துக்குடி துறைமுகம் அருகில் தலா 210 மெகாவாட் திறனில் 5 அலகுகள் உடைய அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 1,050 மெகாவாட் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தென் மாவட்டங்களின் மின் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு ஒடிசா, மேற்குவங்கம் மாநிலங்களில் இருந்து நிலக்கரிகள் கப்பல்களில் எடுத்து வரப்பட்டு கன்வேயர் பெல்ட் வாயிலாக மின்நிலைய வளாகத்திற்கு அனுப்பப்படுகிறது. அங்குள்ள வளாகத்தில் கொட்டி வைக்கப்படும் நிலக்கரி தேவைக்கு ஏற்ப பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மின்நிலையத்தில் நேற்றைய நிலவரப்படி பதிவேட்டின் கணக்குப்படி 6 நாட்களுக்கு மின் உற்பத்தி செய்யக்கூடிய 1.11 லட்சம் டன் நிலக்கரி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் 60 ஆயிரம் டன் நிலக்கரி தான் உள்ளதாகவும், 50 ஆயிரம் டன் நிலக்கரி குறைவாக உள்ளதாக புகார் எழுந்து உள்ளது.

இது தொடர்பாக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அனல்மின் நிலையத்தில் 60 ஆயிரம் டன் நிலக்கரி உள்ளது. மழையில் நனைந்ததால் சில நிலக்கரியை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகி உள்ளது என்றார்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், தூத்துக்குடி மின்நிலையத்தில் நிலக்கரி இருப்பு தொடர்பாக பதிவேட்டுக்கும், இருப்புக்கும் இடையில் வித்தியாசம் இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி உண்மையானால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதற்கிடையே அனல்மின் நிலையத்தின் 2-வது அலகில் நேற்று இரவு திடீரென்று பழுது ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.

அங்கிருந்து உற்பத்தி செய்யப்படும் 210 மெகாவாட் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது 4 அலகுகள் மூலம் 840 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via